×

‘நடராஜரை’ கொண்டாடும் ஈஷா மஹாசிவராத்திரி: இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!

‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான் ‘நடனம் ஆடும் ஒருவரை’ கடவுளாகவும் யோகியாகவும் போற்றி கொண்டாடுகிறோம். இந்த முழு பிரபஞ்சமே ஒரு விதமான நடனத்தில் இயங்குகிறது என நவீன அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்நிலையில் உணர்ந்த யோகிகள் பிரபஞ்ச கூத்தனான சிவனுக்கு சிதம்பரத்தில் கோவில் கட்டியுள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மண்ணில்  ஈஷா மஹாசிவராத்திரி விழா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்த ராத்திரியில் அவருடைய ‘நடராஜர்’ அம்சத்தை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர்ச்சி நிலையில் உணர்வதற்காக இவ்விழாவில் பல்வேறு விதமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டு பிப்.18-ம் தேதி நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் திரு. வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் திரு. மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான திரு. நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் திரு. ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர். இது தவிர, கேரளாவைச் சேர்ந்த ‘தெய்யம்’ நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களும் விழாவை ஆட்டம், பாட்டத்துடன் அதிர செய்ய உள்ளனர்.

பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ - டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி  ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ - டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Isha Mahashivaratri , Isha Mahashivaratri celebrating 'Nataraja': Here is the list of music artists this year!
× RELATED ஈஷா மஹாசிவராத்திரி விழா: இலவசமாக பங்கேற்பது எப்படி? – விவரங்கள் இதோ..