புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் 4ம் ஆண்டு நினைவுதினம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி!

புதுடெல்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் வாகனம் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினார்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாரின் கட்டளைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்பு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இதன்மூலம், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததன் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த நாயகர்களின் நினைவு தினம் இன்று. அவர்களின் மிகப் பெரிய தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் துணி நாட்டை வலிமையானதாகவும் வளர்ச்சிமிக்கதாகவும் மாற்றும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு கோடான கோடி வணக்கங்கள். பாரத மாதாவின் தியாகப் புதல்வர்களுக்கு நாம் இன்று அஞ்சலி செலுத்துகிறோம். ஜெய் ஹிந்த் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2019ல் புல்வாமாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த நமது துணிவுமிகு வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை துணிவுடன் தொடர்ந்து எதிர்கொள்ள அவர்கள் வெளிப்படுத்திய வீரம் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

நமது வீரர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நாடு தலை வணங்குகிறது. அவர்களின் குடும்பத்திற்கு முழு நாடும் உறுதியாக துணை நிற்கிறது என தெரிவித்துள்ளார். உயிரிழந்த துணை ராணுவப் படை வீரர்களுக்காக புல்வாமா மாவட்டத்தில் லெத்போரா பகுதியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் துணை ராணுவத்தின் இன்று வீர வணக்கம் செய்துள்ளார்.

Related Stories: