×

ரூ.95 லட்சம் மதிப்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின்..!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை மற்றும் 43 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் அவர்கள் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி. அவர்களின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.  

2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டுத் தூக்குக் கயிற்றினை ஏற்றுக் கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சி குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கும், தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலை வேள்வியில் தீர்க்கமாய்ப் போரிட்ட சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கும், சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150வது பிறந்த நாள் விழாவினையொட்டி 3.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட 14 அறிவிப்புகளில், சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை மற்றும் 43 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி. அவர்களின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த. மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,Mukherjee Stalin , Chief Minister Mukherjee Stalin inaugurated the statues of freedom fighters worth Rs. 95 lakhs..!
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...