×

3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களின் முதல் தொகுப்பு 2024க்குள் சென்னைக்கு வரும் என தகவல்

சென்னை: மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களின் முதல் தொகுப்பு ஆகஸ்ட் 2024 க்குள் சென்னை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அமைப்பின் 2-ம் கட்ட திட்டத்தின் 118.9 கி.மீ.க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2026-ம் ஆண்டு பூந்தமல்லி-பவர் ஹவுஸ் இடையே இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் முதன்முதலில் இயக்கப்படும், நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ  ரயில்கள் கட்டம் 1 வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

2ம் கட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் பின்னர் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூறியதாவது; மெட்ரோ ரயில் ஸ்ரீ சிட்டியில் இருந்து சென்னை வந்ததும், ரயில் பராமரிப்பு மற்றும் சோதனை நோக்கங்களுக்காக கட்டப்பட்டு வரும் பூந்தமல்லியில் உள்ள டெப்போவிற்கு கொண்டு செல்லப்படும்.

பெட்டிகள் தனித்தனியாக வரும் என்றும் அவை ரயிலாக இணைக்கப்பட வேண்டும். பின்னர், தொடர் நிலையான மற்றும் சோதனைகள் மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இழுவை சோதனை, பிரேக் சிஸ்டம், ரயில் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்பு, பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் ரயிலின் பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும். பூந்தமல்லியில் உள்ள டிப்போவுக்குள் கட்டப்பட்டுள்ள தண்டவாளத்தில் முதலில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சிக்னலிங் அமைப்பு வழங்கப்பட்ட பிறகு, அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ரயில்கள் மீண்டும் சோதிக்கப்படும். இது குறைந்தது 10 அல்லது 12 மாதங்களுக்கு தொடரும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில்களின் முதல் கட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் 2ம் கட்டத்தில் இயக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வடிவமைப்பு, கட்டுப்பாடு மற்றும் சிக்னலிங் அமைப்புகள் வித்தியாசமாக இருப்பதால்  இயக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2ம் கட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாத ரயில்களின் நிறம் மற்றும் தோற்றம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பூந்தமல்லி-பவர் ஹவுஸ் வழித்தடமானது  26.1 கி.மீ தூரம் செல்கிறது, மேலும் இந்த பாதையில் 26 டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க CMRL முடிவு செய்துள்ளது.

Tags : Chennai , The first set of 3-coach driverless metro trains will reach Chennai by 2024
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...