பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையோரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: துர்நாற்றம் வீசும் தண்ணீர்

பல்லாவரம்: பல்லாவரம் பெரிய ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதுடன், ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இதை தடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பல்லாவரம் மேம்பாலம் அருகே பல்லாவரம் பெரிய ஏரி அமைந்துள்ளது. சுமார் 119 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த பெரிய ஏரி, ஆக்கிரமிப்புகள் காரணமாக தற்போது 50 ஏக்கர் பரப்பளவில் சுருங்கி காணப்படுகிறது. இந்த பெரிய ஏரி, ஒரு காலத்தில் இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக மிகப் பெரிய நீராதாரமாக விளங்கியது.

ஆனால், தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால், கழிவுநீர் குட்டையாக காட்சியளித்தது. இந்த ஏரியை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த ஆண்டு உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.14.98 கோடி மதிப்பில் பல்லாவரம் பெரிய ஏரி தூர்வாரப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், சமீபத்தில் பெய்த மழையால் தற்போது ஏரியில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி கடை நடத்தி வரும் பலர், தங்களது கடைகளின் இறைச்சி கழிவுகளை இரவு நேரத்தில் ரேடியல் சாலையோரம் வீசி வருகின்றனர். இந்த கழிவுகள் ஏரியில் விழுவதால் நீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.  

மேலும், ஏரியில் அதிகப்படியான ஆகாய தாமரை வளர்ந்து தூர்ந்து வருவதுடன், தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. மேலும், ஏரியில் வளர்ந்து வரும் ஆகாய தாமரை செடிகள் பாம்பு, தேள், பல்லி போன்ற விஷ ஜந்துக்களுக்கு புகலிடமாகவும் உள்ளது. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு படையெடுத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

அத்துடன், ஏரி தண்ணீர் மாசுபட்டு இருப்பதால் கொடிய நோய்களை பரப்பும் கொசுக்களின் பிறப்பிடமாகவும் பல்லாவரம் பெரிய ஏரி மாறி வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  இதுகுறித்து ஆய்வு செய்து, ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும், ஆகாயத்தாமரையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘எதிர்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், பல்லாவரம் பெரிய ஏரியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பொதுப்பணித்துறை மற்றும் ஏரியை பராமரித்து வரும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் மட்டும் ஏனோ மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி செயல்பட்டு வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பல்லாவரம் பெரிய ஏரியில் வளர்ந்துள்ள அதிகப்படியான ஆகாய தாமரை செடிகளை அகற்றுவதுடன், இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்தி, ஏரியை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

நஞ்சாக மாறும் அபாயம்: பல்லாவரம், நாகல்கேணி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் ரசாயன கழிவுகளை, முறையாக சுத்திரித்து வெளியேற்ற வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் நேரடியாக மழைநீர் கால்வாய்களில் வெளியேற்றப்படுகிறது. இந்த ரசாயன கழிவுகள் மழைநீர் கால்வாய் மூலம் பல்லாவரம் பெரிய ஏரிக்கு செல்வதால் தண்ணீர் நஞ்சாக மாறியுள்ளது. பல ஆண்டாக இவ்வாறு ஏரியில் ரசாயன கழிவுகள் கலப்பதால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மஞ்சல் நிறத்தில் மாறியுள்ளதுடன், ரசாயன வாசனை வருகிறது. இதை பயன்படுத்தும் மக்களுக்கு தோல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Stories: