சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களை முறையாக இயக்குவது குறித்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு முகாம் கீழ்பாக்கத்தில் நடந்தது. இதில் போக்குவரத்து கிழக்கு மண்டல துணை கமிஷனர் சமய் சிங் மீனா கலந்துகொண்டு பேசியதாவது:
சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும். குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றும்போது எந்த இடையூறும் இன்றி செயல்பட வேண்டும்.
நெரிசல் ஏற்படும் இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது. மோட்டார் வாகன சட்டப்படி, வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றினால் சமந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்து, ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். குறிப்பாக ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஓட்டுநர்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஒருவழி பாதையில் ஆட்டோக்களை இயக்க கூடாது. சிக்னலை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
