×

மகளிர் பிரிமியர் லீக் டி20 அதிகபட்ச தொகையாக மந்தனா ரூ.3.40 கோடிக்கு ஏலம்: ஆர்சிபி வாங்கியது

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடருக்கான வீராங்கனைகள் ஏலத்தில், இந்திய அணி துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக ரூ.3.40 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் டி20 தொடரை போல, மகளிருக்கான டி20 தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. மார்ச் 4 - 26 வரை நடைபெற உள்ள இந்த தொடரின் முதலாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் என 5 அணிகள் களமிறங்க உள்ளன. இந்த 5 அணிகளுக்கான வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச அரங்கில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 409 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து 90 வீராங்கனைகளை ஏலம் எடுக்க 5 அணிகளும் போட்டி போட்டன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.12 கோடி செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்திய அணி துணை கேப்டனும் அதிரடி தொடக்க வீராங்கனையுமான ஸ்மிரிதி மந்தனாவை, கடும் போட்டிக்கிடையே ஆர்சிபி அணி ரூ.3.40 கோடிக்கு வாங்கியது. டபுள்யு.பி.எல். தொடரின் முதல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையை மந்தனா தட்டிச் சென்றார். இவரது அடிப்படை விலை ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னரை குஜராத் ஜயன்ட்ஸ் அணியும், இங்கிலாந்தின் நதாலியே ஸைவரை மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா ரூ.3.20 கோடிக்கு வாங்கியது 2வது அதிகபட்ச தொகையாக அமைந்தது. ஐசிசி மகளிர் யு-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மாவை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.2.00கோடிக்கு வாங்கியது.

இந்திய சீனியர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரூ.1.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ.2.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. ஆஸி. நட்சத்திரங்கள் மெக் லான்னிங் (ரூ.1.10 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ்), அலிஸா ஹீலி (ரூ.70 லட்சம், உ.பி.வாரியர்ஸ்), இந்திய அணி வீராங்கனைகள் பூஜா வஸ்த்ராகர் (ரூ.1.90 கோடி), யஸ்டிகா பாட்டியா (ரூ.1.50 கோடி) இருவரையும் மும்பை இந்தியன்ஸ் வசமாக்கியது.



Tags : Women's Premier League ,Mandana ,RCB , Women's Premier League T20 highest bid for Mandana for Rs 3.40 crore: RCB bought
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...