மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று வெற்றியும் பெற்றார். ஹர்திக் தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஹர்திக் மீண்டும் திருமணம் செய்ய உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹர்திக் பாலிவுட் நடிகையும் தனது மனம் கவர்ந்த காதலியுமான நடாஷா ஸ்டான்கோவிச்சை மும்பை கோர்ட்டில் கடந்த 2020ம் ஆண்டு மே 31ம்தேதி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தான். தற்போது வெளியான தகவலின் படி, ஹர்திக் மற்றும் நடாஷா தம்பதி காதலர் தினமான நாளை (பிப்ரவரி 14) மீண்டும் திருமணம் செய்ய உள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால் உதய்பூரில் திருமணத்தை கொண்டாட விரும்புவதாக இருவரின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதால் நட்சத்திர ஜோடி பிரமாண்டமான திருமண கொண்டாட்டத்தை நடத்தவில்லை,
ஆனால் இப்போது அவர்கள் தங்கள் காதலை ஆடம்பரமான திருமண விழாவுடன் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். ”அப்போது அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். அது நடந்தவுடன் எல்லாம் அவசரமானது. தற்போது ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருந்திருக்கிறது. அவர்கள் அதைப்பற்றி மிகவும் உற்சாகமாக உள்ளனர்,” என்று ஹர்திக்கின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.