×

செங்கோட்டை மாஜிஸ்திரேட் அறிக்கை ஐகோர்ட் கிளையில் தாக்கல்; தன்னை யாரும் கடத்தவில்லை என கிருத்திகா வாக்குமூலம்: தாத்தா, பாட்டி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கிருத்திகாவின் வாக்குமூலம் குறித்த செங்கோட்டை மாஜிஸ்திரேட்டின் அறிக்கை, இன்று சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தன்னை யாரும் கடத்தவில்லை என்று கிருத்திகா தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் தலைமறைவாக உள்ள நிலையில், தாத்தா, பாட்டியிடம் அவரை ஒப்படைப்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இலஞ்சியைச் சேர்ந்த கிருத்திகா படேலை காதலித்து, கடந்த ஜன.20ல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கடந்த 25ம் தேதி அவரது பெற்றோர், என்னை தாக்கி விட்டு கிருத்திகாவை கடத்திச் சென்று விட்டனர். கிருத்திகாவை மீட்டு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில், ‘‘12 பேர் மீது வழக்கு பதிந்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனிப்படையினர் குஜராத் சென்றுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் போலீசார், கிருத்திகாவை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், கிருத்திகாவிடம் விசாரித்தனர். தனக்கு மைத்ரிக் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதால், தாமாக குஜராத் சென்றதாக தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், ‘‘குஜராத்தில் திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா’’ என்றனர். தற்போது ஆதாரங்கள் இல்லை என கிருத்திகா கூறினார்.

உடனே நீதிபதிகள், ‘‘மைத்ரிக்குடன் திருமணம் நடந்தது என்றால், ஏன் வினித்தை திருமணம் செய்ய வேண்டும்? இதன் பிறகு ஏன் குஜராத் செல்ல வேண்டும். இதில் முரண்பாடு உள்ளது’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் கிருத்திகாவை திருமணம் செய்ததற்கான படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கடந்தாண்டு மைத்ரிக்குடன் குஜராத்தில் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. கிருத்திகா நல்ல மனநிலையில் யாருடைய அழுத்தமும் இன்றி இருக்க வேண்டும். அவரை குற்றாலம் நன்னகரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும்.

விசாரணை அதிகாரி அல்லது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறி, விசாரணையை பிப்.13க்கு (இன்று) தள்ளி வைத்தனர். இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் செங்கோட்டை மாஜிஸ்திரேட் முன்பு கிருத்திகா ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு கூடுதல் வக்கீல் மீனாட்சிசுந்தரம் ஆஜராகி, கிருத்திகா மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமுலத்தை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.
‘நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியபடியே வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னை யாரும் கடத்தவில்லை. தாமாக விரும்பி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர்’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை போலீசார் தொடரலாம். கிருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது பாதுகாப்பு முக்கியம். எனவே அவரை தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். அவரை, அவருடைய தாத்தா, பாட்டியிடம் ஒப்படைப்பது குறித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர்.


Tags : Chengotta Magistrate ,Igort Branch ,Krittika , Red Fort Magistrate's Report Filed in Court Branch; Kritika's confession that no one kidnapped her: Order to file affidavit on behalf of grandparents
× RELATED பழனியில் நவராத்திரி விழாவில்...