×

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் காட்சி பொருளாக மாறிய எரியாத மின்விளக்குகள்: சீரமைக்க வலியுறுத்தல்

ஆவடி: சென்னை நகரை ஒட்டிய ஆவடி நகராட்சி, கடந்த 2008ம் ஆண்டு பெருநகராட்சியாக மாறி, தற்போது 65 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. இங்கு 48 வார்டுகள், 568 கிமீ நீள சாலை மற்றும் 4,104 தெருக்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மக்களிடம் பல்வேறு வரி இனங்கள் மூலமாக மொத்தம் ₹82,489 வசூலிக்கப்படுகிறது. எனினும், இங்கு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆவடி மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலை மற்றும் தெருக்களில் மின்விளக்கு கம்பங்கள் முறையான பராமரிப்பின்றி, செயல்பாடுகளை இழந்துள்ளது.

இதனால் இங்கு இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்த தீவு பகுதி போல் அனைத்து இடங்களும் பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அடிதடி, வழிப்பறி, செயின் பறிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையோர மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கவுன்சிலர் உள்பட மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆவடி மாநகராட்சி பதிவேடுகளின்படி, இங்கு டியூப் லைட், சோடியம் ஆவி விளக்குகள், உயர் மின்கோபுர விளக்கு, சிறிய இலை மின்கோபுரம், சிறிய ஒளிரும் விளக்குகள், எம்.எச் விளக்கு, எல்இடி விளக்கு என மொத்தம்  21,538 தெருவிளக்குகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது எரியாமல், எவ்வித பயன்பாடுகள் இன்றி மக்களிடையே பரிதாப காட்சி பொருளாக மாறியுள்ளது. எனவே, ஆவடி மாநகராட்சி பகுதிகளில் எரியாத தெரு மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தொகுதி அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Avadi Corporation , Non-burning electric lamps that have become a spectacle in Avadi Corporation areas: Urge to repair
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்