×

வார விடுமுறையை கொண்டாட ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஏற்காடு :  சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் பூங்காக்களில் பொழுது போக்கியும், படகு இல்லத்தில் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். வெயில் அடித்த போதிலும், குளிர்ந்த காற்று வீசியதால், ரம்மியமான சூழலை மக்கள் ரசித்தனர். இதனால் அங்குள்ள ஓட்டல்கள், தற்காலிக கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

அதேபோல், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  பூலாம்பட்டி காவிரியில் குவிந்தனர். அவர்கள் விசைப்படகுகளில் குடும்பத்துடன் பயணித்தனர். வேன், கார், சரக்கு ஆட்டோ மற்றும் டூவீலரில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஆங்காங்கே முகாமிட்டு, நீர்மின் கதவணை பாலம், பஸ் நிலையம் கைலாசநாதர் கோயில், மூலப்பாறை மற்றும் மாட்டுக்காரர் பெருமாள் கோயில் சுற்றிப்பார்த்தனர். தடுப்பணை பாலம் பகுதியில் நின்றும், படகு சவாரியின் போதும் செல்பி எடுத்துக்கொண்டனர். இங்கு உள்ள மீன் கடைகள், ஓட்டல்கள் மற்றும் கடையிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஓனாம்பாறை, பில்லுக்குறிச்சி, குள்ளம்பட்டி, மூலப்பாதை ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில், நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு பல்வேறு பகுதிகளைச் சுற்றி பார்த்த அவர்கள், மெயினருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்து, அருவிகளின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் திரண்டதால், ஓட்டல்கள், மீன் கடைகளில் விற்பனை களைகட்டியது. இதையொட்டி, ஒகேனக்கல் போலீசாருடன் ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு, நேற்று  பல்வேறு பகுதிகளிலிருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஆகாய கங்கை  நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் குளித்தும், செல்பி  எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில்,  எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயிலில் வழிபாடு நடத்தினர்.

பின்னர், தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை காட்சி  முனையம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களை பார்வையிட்டனர். மாலையில் வீடு  திரும்பும்போது சோளக்காடு, தொம்பளம் பகுதிகளில் உள்ள பழச்சந்தையில், கொல்லிமலையில் விளையும் அன்னாசி, மலை வாழைப்பழம், பலாப்பழம்,  கொய்யாப்பழம், மிளகு ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

Tags : Ogenakal ,Kolimalaye , Yercaud: The number of tourists has increased in the last 2 days to Yercaud in Salem district. They are Anna Park, Ladies
× RELATED தொடர் விடுமுறையை கொண்டாட ஏற்காடு, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்