×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு... மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவு!!

சென்னை: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு அபராதத்துடன் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த பாலச்சந்தர் கணேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றி, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட, அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும். அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய, தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி, தமிழ்நாடு முதல்வரின் முகவரி துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு ஜூலை 22ம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்.பிக்கு பரிந்துரைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடந்த ஆண்டு ஜனவரியில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடஎன்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல், வழக்கை தாக்கல் செய்தது மூலமாக நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளதாக கூறி மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Tags : EPS ,Pollachi , Pollachi, Sex, EPS, High Court
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...