×

பர்கூர் அருகே பரபரப்பு ஒரே இடத்தில் பதுங்கிய 3 மலைப்பாம்புகள்-பொக்லைன் மூலம் பாறைகளை தோண்டி பிடித்தனர்

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே ஒரே இடத்தில் இருந்த 3 ராட்சத மலைப்பாம்புகளை தீயணைப்புத்துறையினர் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எமக்கல்நத்தம் காந்தி நகரை சேர்ந்தவர் குணரூபன் விவசாயி. இவரது நிலத்தில் ஒரு ஓடை உள்ளது. அதை கடந்து செல்ல கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டின் கீழ் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, குணரூபன் வளர்த்து வந்த ஒரு நாயை ஒரு மலைப்பாம்பு சுற்றியுள்ளது. இதையடுத்து நாய் கத்தும் சத்தத்தை கேட்ட குணரூபன் உள்ளிட்டோர் அங்கு சென்று, அந்த பாம்பிடம் இருந்து நாயை மீட்டுள்ளனர். அதன் பின்பு அந்த பாம்பு எங்கு சென்றது என தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை அதே இடத்தில் ஒரு மலைப்பாம்பு இருந்ததை பார்த்த அவர், இது குறித்து பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதயைடுத்து நிலைய அலுவலர் தர்மலிங்கம், சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து பிரிவு) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் விவேகானந்தன், சின்னமுத்து, பொன்னுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அந்த மலைப்பாம்பை காணவில்லை.

இதையடுத்து பொக்லைன் வரவழைத்து, அப்பகுதியில் உள்ள பாறைகளை அகற்றி பார்த்த போது, பாறை இடுக்கில் 10 அடி முதல் 12 அடி நீளம் கொண்ட 3 மலைப்பாம்புகள் இருந்ததை பார்த்துள்ளனர். பின்னர் அந்த மலைப்பாம்புகளை பிடித்த தீயணைப்புத்துறையினர், அவற்றை கிருஷ்ணகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த பாம்புகளை பார்க்க அப்பகுதியில் ஏராளமானோர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Barkur , Krishnagiri: The fire department rescued 3 giant pythons from one place near Barkur and handed them over to the forest department.
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...