நான் அண்ணாமலையின் ‘ஏ’ டீம் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுப்போம்: சூர்யா சிவா பேட்டி

திருச்சி: ‘அண்ணாமலையை விமர்சித்து வரும் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுப்போம்’ என சூர்யா சிவா தெரிவித்தார். பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ரவுடி வரிச்சூர் செல்வம், காயத்ரி ரகுராம் இணைந்து இருக்கும் படத்தை டிவிட்டரில் வெளியிட்டதற்காக தான் மன்னிப்பு கேட்டதாக வரிச்சூர் செல்வம் கூறி உள்ளார். அவர்தான் என்னிடம் கேட்டார் (அதற்கான ஆடியோவை சூர்யா சிவா வெளியிட்டார்). அந்த புகைப்படத்தை அகற்றக் கூறி கெஞ்சியதால் போட்டோவை அகற்றினேன். அவர் மிரட்டியோ, ரவுடி என்பதாலோ நான் அகற்றவில்லை. நான் போட்டோ போட்ட போது வரிச்சூர் செல்வம் மற்றும் காயத்ரி ரகுராம் என யாரும் மறுப்பும் தெரிவிக்க வில்லை.

காயத்ரி ரகுராம் மதுரையில் ஒரு திருமணத்திற்கு சென்றபோது போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த அன்று இரவு எங்கு சென்றார் என்பது பாதுகாப்பில் இருந்த காவலர்களுக்கே தெரியாது. எனவே தான் காயத்ரி ரகுராமுடன் இரவு நேரத்தில் வரிச்சூர் செல்வத்திற்கு என்ன வேலை என டிவிட்டரில் கேட்டேன். அதற்கு வரிச்சூர் செல்வம் நான் ஹோட்டலில் சாப்பிடப்போனேன். அங்கு எதேச்சையாக சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த போட்டோ எடுக்கப்பட்டது ஒரு தென்னந்தோப்பில் அது ஓட்டலில் எடுக்கப்பட்டது இல்லை.

வரிச்சூர் செல்வம் தான் தன்னுடைய நண்பரின் செல்போனில் இருந்து எனக்கு பேசி அந்த புகைப்படத்தை அகற்ற வேண்டுகோள் வைத்தார். காயத்ரி ரகுராம் இன்றுவரை அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். எனவே நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம், ஏனென்றால் நான் இன்று வரை பாஜ பிரமுகராக தொடர்கிறேன். எனது ராஜினாமாவை பாஜ தலைமை இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை. நான் அண்ணாமலையின் ஏ டீம் தான். எனவே, அண்ணாமலைக்கு எதிரான எந்த விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு முதலாவதாக நான் பதிலளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: