×

காந்தி மண்டபத்தில் கட்டபொம்மன் மருதுபாண்டியர்கள் சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வளாகத்தில், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர்களின் சிலைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தின் வளாகத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலையினையும், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை மற்றும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாரின் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கினையும் அவரது மார்பளவுச் சிலையையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து, சென்னை, தலைமைச்செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களின் எதேச்சதிகார சட்டத்தை எதிர்த்து போராடியதால் 1920ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 தியாகிகளை கௌரவிக்கும் வகையிலும், இந்த நிகழ்வின் 100 ஆண்டுகள் நினைவை குறிக்கும் வகையிலும் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார்.

இதன் பின்னர், பொள்ளாச்சி, நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சுப்பிரமணியம் மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோருக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அரங்கம் மற்றும் திருவுருச் சிலைகளுக்கும், சுதந்திரப்போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் நினைவாக உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திருவுருவச்சிலைக்கும், ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அரங்கத்திற்கும் காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி சிறப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Kattabomman ,Gandhi Hall ,Chief Minister ,M. K. Stalin , Statues of Kattabomman Marutubandiyas at Gandhi Mandapam: Chief Minister M. K. Stalin inaugurates today
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...