சென்னை: இந்திய நாடு கடந்த 8 ஆண்டுகளில் பல மாற்றங்களை கண்டுள்ளநிலையில், 2047ம் ஆண்டில் ரூ.40 டிரில்லியன் பொருளாதார நாடாக மாறும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், ‘மோடி மற்றும் நனவாகும் கனவுகள்’, ‘அம்பேத்கர் மற்றும் மோடி’ ஆகிய புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்றனர். மற்றும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மேற்கண்ட இரு புத்தகங்களின் தமிழாக்கத்தை ஆளுநர் ரவி வெளியிட ஒன்றிய அமைச்சர் எல். முருகன் பெற்றுக் கொண்டார். அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது: நான் அறிந்தவரையில் அம்பேத்கர் குறித்து பலர் முழுவதுமாக அறிந்து கொள்ளவில்லை. இன்று சமூக நீதி என்று பல கட்சிகளும் பேசி வரும் நிலையில் தான், தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். 2047ல் இந்தியா 40 டிரில்லியன் பொருளாதாரத்தில் மேம்பட்டு உலகில் சிறந்ததாக மாறும். 21ம் நூற்றாண்டின் சிறந்த செயற்பாட்டாளர் பிரதமர்மோடி. இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
