×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனலில் சவுராஷ்டிரா - பெங்கால்: கர்நாடகா, ம.பி. வெளியேற்றம்

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் 2022-23 சீசன் இறுதிப் போட்டியில் விளையாட சவுராஷ்டிரா, பெங்கால் அணிகள் தகுதி பெற்றன. அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம், கர்நாடகா அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதியில் கர்நாடகா அணியுடன் மோதிய சவுராஷ்டிரா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்$று பைனலுக்கு முன்னேறியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் கர்நாடகா 407 ரன் குவித்த நிலையில் (கேப்டன் மயாங்க் 249, ஸ்ரீனிவாஸ் 66), சவுராஷ்டிரா 527 ரன் குவித்து (ஷெல்டன் ஜாக்சன் 160, கேப்டன் அர்பித் வாசவதா 202, சிராக் ஜானி 72) முன்னிலை பெற்றது.

120 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய கர்நாடகா 4ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மயாங்க் 55, நிகின் ஜோஸ் 109, கவுதம் 23, விஜய்குமார் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் சேத்தன் சகாரியா, தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 4 விக்கெட், பார்த் பட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 115 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா, 42 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், கேப்டன் வாசவதா - சகாரியா ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 63 ரன் சேர்த்து, கர்நாடகாவின் வெற்றிக் கனவை கலைத்தது. சகாரியா 24 ரன் (48 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். சவுராஷ்டிரா 34.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது. வாசவதா 47 ரன் (51 பந்து, 7 பவுண்டரி), பிரேரக் மன்கட் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா பந்துவீச்சில் கிருஷ்ணப்ப கவுதம், வாசுகி கவுஷிக் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். சவுராஷ்டிரா கேப்டன் வாசவதா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நடப்பு சாம்பியன் அவுட்: இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரையிறுதியில் பெங்கால் அணியுடன் மோதிய நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம் 306 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. முதல் இன்னிங்சில் பெங்கால் 438 ரன் குவித்த நிலையில் (கராமி 112, மஜும்தார் 120), ம.பி. 170 ரன்னுக்கு சுருண்டது (சரண்ஷ் 65, ஷுபம் ஷர்மா 44*). 268 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 279 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (மஜும்தார் 80, பிரமானிக் 60*).

இதையடுத்து, 548 ரன் எடுத்தால் வெற்றி என்ற எட்ட முடியாத இலக்கை நோக்கி விளையாடிய ம.பி. அணி 39.5 ஓவரில் 241 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. ரஜத் பத்திதார் அதிகபட்சமாக 52 ரன் (58 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். பெங்கால் பந்துவீச்சில் பிரமானிக் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 306 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு அரையிறுதியில் ம.பி. அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்த பெங்கால் அணி, இம்முறை அதற்கு பதிலடி கொடுத்து பழிதீர்த்துக் கொண்டது. 16ம் தேதி தொடங்கும் பைனலில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

Tags : Saurashtra ,Bengal ,Ranji Cup Cricket Final ,Karnataka , Saurashtra vs Bengal in Ranji Cup Cricket Final: Karnataka, M.P. Discharge
× RELATED மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு...