×

கனடாவில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: பலூன்களால் தொடரும் பீதி

வாஷிங்டன்: கனடா வான்வௌியில் பறந்த மர்ம பொருளை அமெரிக்காவின் எப்-22 விமானம் சுட்டு வீழ்த்தியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணுஆயுத பாதுகாப்பு தளத்தின் மீது கடந்த பிப்ரவரி 1ம் தேதி பறந்த சீனாவின் ராட்சத உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதேபோல், கடந்த 4ம் தேதி கனடாவின் அலாஸ்கா எல்லையின் வான்பரப்பில் 40,000 அடி உயரத்தில் பறந்த மர்ம பொருளை அமெரிக்காவின் எப்-22 விமானம் சுட்டு வீழ்த்தியது.  உளவு பார்ப்பதற்காக சீனா மர்ம பலூனை பறக்க விட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள சீனா வானிலை ஆய்வுக்காக பலூன் பறக்க விட்டதாகவும், அதனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது சர்வதேச விதிகளை மீறிய செயல் எனவும் தெரிவித்துள்ளது. இதனை ஏற்க மறுத்துள்ள அமெரிக்கா சீனாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன், அமெரிக்காவில் உள்ள சீனாவை சேர்ந்த 6 விமான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தால் அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவின் வடமேற்கு பகுதியான யூகோன் மாகாண வான்எல்லை மீது பறந்த உருண்டை வடிவ மர்ம பொருளை அமெரிக்காவின் எப்-22 பாதுகாப்பு விமானம் நேற்று சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் யூகோன் மாகாணத்தின் வான்பகுதியில் மர்ம பொருள் பறப்பதாக வடஅமெரிக்க விண்வௌி பாதுகாப்பு அமைப்பு எங்களுக்கு தகவல் கொடுத்தது.  இதையடுத்து அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். கனடா, அமெரிக்க விமானங்கள் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டன.

அப்போது அமெரிக்காவின் எப்-22 விமானம் கனடா வான்வௌியில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். யூகோன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளின் பாகங்களை சேகரித்து, ஆய்வு செய்யும் பணிகளை கனடா மேற்கொள்ளும். மர்ம பொருள் பற்றி தகவல் கூறிய வடஅமெரிக்க விண்வௌி பாதுகாப்பு அமைப்புக்கு நன்றி” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த வாரம் அமெரிக்காவில் பறந்த சீன பலூனை விட இந்த உருண்டை வடிவ மர்ம பொருள் சிறியதாக இருந்தது” என கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Tags : US ,Canada , US shoots down mystery object that flies over Canada: Panic continues with balloons
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!