×

சென்னையில் ஒரு வாரத்தில் நன்னடத்தை விதிமீறிய 15 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில்,காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கொலை, கொலை முயற்சி, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 1.1.2023 முதல் 10.2.2023 வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடியில் ஈடுபட்ட 15 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள் என மொத்தம் 37 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4.2.2023 முதல் 10.2.2023 வரையிலான ஒரு வாரத்தில் 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், துணை ஆணையர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்துவிட்டு, அதை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், தி.நகர், திருவல்லிக்கேணி மற்றும் கொளத்தூர் ஆகிய காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 2 குற்றவாளிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 8 குற்றவாளிகள் என மொத்தம் 15 குற்றவாளிகள் கடந்த 4.2.2023 முதல் 10.2.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Chennai , 15 offenders arrested for violating code of conduct in one week in Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...