நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளை திருப்பதி, திருத்தணி விரைந்தது தனிப்படை

பெரம்பூர்: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஜே.எல். நகைக்கடையில் கடந்த வியாழக்கிழமை இரவு வெல்டிங் மிஷினால் ஓட்டை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து தப்பிச் சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்  நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரனின் மகன் ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கூடுதல் ஆணையர் அன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரவு 2 மணிக்கு காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள், 5 கிலோ சிலிண்டருடன் இறங்கி நகைக்கடையின் ஷட்டரை வெட்டி எடுத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து விட்டு, மீண்டும் காரில் ஏறி தப்பி செல்வதும் தெரியவந்தது. இதற்கிடையே கொள்ளையர்களை இறக்கி விட்ட பின்பு சந்தேகம் வரக்கூடாது என அந்த பகுதியிலேயே கார் சுற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரின் பதிவெண்ணை வைத்து கொள்ளையர்கள் தப்பி சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது இரண்டரை மணி நேரத்தில் பூந்தமல்லியை தாண்டி திருமழிசை - ஊத்துக்கோட்டை வழியாக கார் சென்றுள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண் யாருடையது என விசாரணை நடத்திய போது, அது போலி பதிவெண் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அடுத்தபடியாக கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் ஆதாரங்கள் மற்றும் மற்ற ஆதாரங்கள் மூலமாக கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பாக, எந்த பகுதியில் இருந்து கொள்ளையர்கள் வந்தார்கள் என்பது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளை நடந்த பின்பு ஆசாமிகள் தப்பி செல்லும் சொகுசு காரின் பின்புறம் வேறு ஒரு கார் வருவதும் சிறிது தூரம் சென்ற பின் அந்த கார் மறைவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுபோன்று பல்வேறு இடங்களில் சொகுசு காரை குறிப்பிட்ட ஒரு கார் பின்தொடர்ந்து வருவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கொள்ளையர்கள் இரண்டு கார்களில் வந்தார்களா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரதான மற்றும் சிறிய லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றிலும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெரம்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் கடைசியாக ஒரு மாதத்தில் யார் யார் வந்து தங்கினார்கள் என்பது குறித்த தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி மூலம் கிடைத்த நபர் ஒருவரின் புகைப்படத்தை போலீசாரிடம் காண்பித்து நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி மற்றும் திருத்தணியில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த வழக்கில் விரைவில் முக்கிய துப்பு கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: