பெரம்பூர்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தவிர்க்கவும் அவ்வப்போது போக்குவரத்து போலீசார் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதலில் வியாசர்பாடியில் உள்ள லாரிகள் தண்ணீர் நிரப்பும் குடிநீர் மையத்தில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார். மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க ஓட்டுநர்கள் என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை விதிமுறைகளை மீறி போடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடுங்கையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சாலை விதிகள் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்தனர். அப்போது பொதுமக்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டணங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காசி விஸ்வநாதன், மனோகரன் மற்றும் தலைமை காவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
