பல்லாவரம் அருகே 4வது மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் பலி: கொலையா விசாரணை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே 4வது மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், குருசாமி நகரில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு, தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (33) உள்ளிட்ட 12 பேர் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், 4வது மாடியில் அனைவரும் உறங்கி உள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்த போது, மணிகண்டன் மட்டும் மாயமாகியிருந்தார்.

அவரை தேடியபோது, அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தின் மாடியில், தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சடலமாக கிடந்ததைப் பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த சங்கர்நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மணிகண்டன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4வது மாடியில் படுத்திருந்த மணிகண்டன், அவராகவே தூக்கத்தில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது முன்பகை காரணமாக வேறு யாரேனும் அவரை கீழே தள்ளி கொலை செய்தனரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: