×

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட ஆளவந்தார் அறக்கட்டளை இடத்தில் ரூ.10.44 கோடியில் மதில்சுவர் பணி தீவிரம்: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அங்கு ரூ.10.44 கோடியில் மதில்சுவர் கட்டும் பணி அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம் இசிஆர் சாலையொட்டி, நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், கடற்கரையை ஒட்டி சவுக்கு கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். இதனால், ஆங்கிலேயே அதிகாரிகள் இவருக்கு 1,054 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி கௌரவித்தனர்.

பின்னர், ஆளவந்தார் பல ஆண்டுக்கு முன், நான் உயிரிழந்த பிறகு தனது பெயரில் உள்ள சொத்துக்கள், அனைத்தும் தர்ம சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமென, கைப்பட உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார். இச்சொத்துக்கள், மூலம் கிடைக்கும் வருவாயில், மாமல்லபுரம் ஸ்ரீ ஸ்தலசயன பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருப்பதி பெருமாள் கோயில்களில் உற்சவம் நடக்கும்போது, அன்னதானம் வழங்க, உயில் சாசனத்தில் குறிப்பிட்டிருந்தார். இவரது, சொத்துக்கள் அனைத்தும் தற்போது இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இவரது, சொத்துக்களை தனிநபர்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகள் கட்டி இருந்தனர்.
 
கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். இவரது, சொத்துக்களை யாரும் ஆக்கிரமிக்காத வகையில் ரூ.10.44 கோடியில், 10 கிமீ தூரம் மதில் சுவர் கட்ட இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். இதையடுத்து, ஆளவந்தார் அறக்கட்டளை சொத்தை பாதுகாக்க ரூ.10.44 கோடி மதிப்பில் மதில் சுவர் கட்டும் பணியை கடந்த டிசம்பர் 17ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, புலிக்குகை பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளையினர் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில், பூமி பூஜை போட்டு பணியை தொடங்கினர். ஆனால், சில நிர்வாக காரணங்களாலும், பொருட்கள் தட்டுப்பாட்டாலும் மதில் சுவர் கட்டும் பணி மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சியில் அடங்கிய சாலவான்குப்பம் பகுதியில் மதில் சுவர் கட்டும் பணி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது, மதில் சுவர் கட்டும் பணியில் ஊழியர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Elwandar Trust ,Charities Department , Rs 10.44 crore wall work intensifies at Elwandar Trust site recovered from encroachment: Charity Department action
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்