×

துருக்கி, சிரியாவில் பலி 28,000-ஐ தாண்டியது; மீட்புப் பணிக்கு மத்தியில் கொள்ளை, கடத்தல்: ஆஸ்திரியா, ஜெர்மனி நாடுகள் மீட்பு பணியை நிறுத்தின

அங்காரா:  துருக்கி, சிரியாவில் பலி 25,400-ஐ தாண்டிய நிலையில், அங்கு மீட்புப் பணிக்கு மத்தியில் கொள்ளை, கடத்தல் அதிகரித்துள்ளதால் ஆஸ்திரியா, ஜெர்மனி நாடுகள் மீட்பு பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. பயங்கரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் ஆறாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டும், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவோரையும் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை  28,000-ஐ கடந்துவிட்டது. குறிப்பாக துருக்கியில் 24,848 ஆகவும், சிரியாவில் 3,553 ஆகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவிகள், அவசர மற்றும் முக்கியமான பராமரிப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தை வகையில் ஏழாவது ‘ஆபரேஷன் தோஸ்த்’ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஏர்பேஸில் இருந்து நேற்று சிரியா மற்றும் துருக்கிக்கு புறப்பட்டது. இதேபோல் பல்வேறு நாடுகளும் துருக்கி, சிரியாவுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து துருக்கியும், சிரியாவும் மீண்டு வரும் அதேநேரம், சில பகுதிகளில் கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அதனால் ஆஸ்திரிய ராணுவம், ஜெர்மனியின் ஃபெடரல் ஏஜென்சி ஃபார் டெக்னிக்கல் ரிலீஃப் ஆகியன பாதுகாப்புக் காரணங்களால் தங்களது மீட்புப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இவ்விவகாரம் குறித்து துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி உள்ளோம். கொள்ளை அல்லது கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்’ என்று எச்சரித்துள்ளார். மீட்புப் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் அதேநேரம் கடத்தலும், கொள்ளையும் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியரின் உடல் மீட்பு: உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் கோட்வார் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் இந்த வார தொடக்கத்தில் வணிக பயணமாக துருக்கி சென்றிருந்தார். மாலத்யாவில்  உள்ள ஓட்டல் ஒன்றில் விஜயகுமார் தங்கிருந்த போது, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் மீட்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக கட்டிட இடிபாடுகளில் இருந்து விஜயகுமாரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இதனை துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் உறுதிசெய்துள்ளது. அதையடுத்து விஜயகுமாரின் உடலை துருக்கியில் இருந்து  இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



Tags : Turkey ,Syria ,Austria ,Germany , Turkey, Syria death toll exceeds 28,000; Looting, Kidnapping Amid Rescue: Austria, Germany Suspend Rescue Operations
× RELATED துருக்கியில் உள்ளூர்...