பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜர்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: காந்தாரா படத்தில் வரும் வராரூகரூபம் பாடல் மலையாள ஆல்பத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் ஆகியோர் இன்று கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.

சமீபத்தில் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்ற கன்னட படமான காந்தாராவில் வராகரூபம் என்ற பாடல் உள்ளது. இந்தப் பாடல் தங்களது நவரசம் என்ற ஆல்பத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறி கேரளாவை சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழு கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது.

இது தொடர்பாக காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, தயாரிப்பாளர் விஜய் கிர்குந்தர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இவர்கள் 2 பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வராகரூபம் பாடலை படத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் 2 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வராகரூபம் பாடலை பயன்படுத்தக் கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கியது. மேலும் ரிஷப் ஷெட்டியும், தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரும் கோழிக்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் 12, 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி இருவரும் இன்று கோழிக்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: