மீனம்பாக்கம்: இலங்கையில் 3 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துவிட்டு, இன்று அதிகாலை 4 மணியளவில் விமானம் மூலமாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் சென்னை திரும்பினர். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இருநாட்டு அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் சுமூகத் தீர்வு ஏற்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார்.
இலங்கையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை ஆகிய இருவரும் 3 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துவிட்டு, இலங்கையில் இருந்து ஏர்இந்தியா விமானம் மூலமாக இன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் தமிழக பாஜ சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 2015ம் ஆண்டு இலங்கை சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். அக்கட்டிடத்தை தற்போது நாங்கள் திறந்து வைத்தோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. மேலும், அங்கு சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து பேசப்பட்டது.
இலங்கை சிறைகளில் நேற்றுவரை, ஒரு இந்திய மீனவர்கூட இல்லை. மேலும், தமிழக மற்றும் பல்வேறு மாநில மீனவர்களின் படகுகளை விடுவிப்பது பற்றி ஏற்கெனவே ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நானும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தி இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, தற்போது இருதரப்பு அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும். இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்தார்.
