ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளான பொள்ளாச்சி மற்றும் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை கால்வாய்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாய்களுக்கு அண்மையில் 4வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே வேட்டைக்காரன்புதூர் மெயின்கால்வாயின் ஒரு பகுதியில் கடந்த 9ம் தேதி அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டது.
சுமார் 25அடி சுற்றளவிற்கு ஏற்பட்ட உடைப்பால், அதிலிருந்து ஆயிரகணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணானது. தகவலறிந்த பொதுப்பணித்துறையினர், வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் தண்ணீர் திறப்பை நிறுத்தினர். இதையடுத்து, அந்த கால்வாயை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணி கடந்த இரண்டு நாட்களாக நடக்கிறது.
தற்போது உடைந்த வாய்க்காலின் இருபுறமும், பொக்லைன் கொண்டு சமன்படுத்தப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி நடக்கிறது. இப்பணி இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு செய்து, மீண்டும் வேட்டைக்காரன்புதூர் மெயின் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
