×

பண்ருட்டி பகுதியில் கடும் பனியால் கருகும் முந்திரி பூக்கள்: விவசாயிகள் வேதனை: ஆலோசனை வழங்க கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்ெபாழிவால் முந்திரி மரங்களில் பூக்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். பண்ருட்டி அருகே காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், சாத்திப்பட்டு, பணிக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 50,000 ஏக்கர் அளவில் முந்திரி விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் முந்திரி பழங்கள், கொட்டைக்காக பூக்கள் பூக்கத் தொடங்கும். இதில் ஆண், பெண் என தனித்தனியாக பூக்கள் அதிகளவில் இருக்கும். மார்ச் மாதம் பிஞ்சு விடவும், மேமாதம் காய்க்க தொடங்கும். கடந்த சில வருடங்களாகவே முந்திரி, பலாப்பழங்கள் விளைச்சல் குறைவாகவே இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.  கிராமப் பகுதிகளில் 7 மணி வரை இந்த பனிப் பொழிவு நீடிக்கிறது. முந்திரி மரங்களில் காய்க்க தொடங்கும் பூக்கள் பனியால் கருகி விடுகின்றன. இதனால் இந்த வருடம் விளைச்சல் குறைவாக இருக்கும் என தெரிகிறது. சொட்டு நீர் பாசன முறை மூலம் தண்ணீர் தெளிக்காலம் என வேளாண்மை துறையினர் தெரிவித்து உள்ளனர். எனவே முந்திரி விவசாயிகள் வேளாண்மை துறையினரிடம் உரிய ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சி.என்.பாளையம், கடலூர், நடுவீரப்பட்டு, சேத்தியாத்தோப்பு, விசூர் உள்ளிட்ட கடலூர் மாவட்டம் முழுவதும் முந்திரி பூக்கள் கருகி வருகின்றன.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி சங்க பொருளாளர் செல்வமணி கூறுகையில், கடலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் முந்திரி விவசாயம் நடந்து வருகிறது. இதனை நம்பி சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜனவரி மாதம் தான் அதிகளவில் முந்திரி மரங்களில் பூக்கள் பூக்கத்துவங்கும். இதன் பிறகு தான் பிஞ்சுகள் விட்டு காய்த்து பழமாகும். ஆனால், பனிப்பொழிவால், பிஞ்சிலேயே முந்திரி பூக்கள் கருகின. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து சோகத்தில் உள்ளனர்.

வேளாண்மை துறையினர் இதுகுறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, பூக்கள் கருகுவதை தடுக்க உரிய அறிவுரைகள், மருந்துகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்து விடும் நிலை உள்ளது என்றார். மேலும், கிராமத்தில் உள்ள முந்திரி விவசாயிகளுக்கு பூக்கள் கருகுவதை தடுக்க போதிய வழிமுறைகள் தெரியவில்லை. முந்திரி மரங்கள் உள்ள கிராமங்களுக்கு வேளாண்மைத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உரிய ஆலோசனைகள் வழங்கினால் மட்டுமே முந்திரி விளைச்சல் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும். பண்ருட்டியில் விளையும் முந்திரி கொட்டைகள் மாதம் ஒன்றிற்கு 350 டன் அளவிற்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி வருகிறது. இதுபோன்ற பனிப்பொழிவு ஏற்பட்டால் ஏற்றுமதி பாதிப்பதோடு, பொருளாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார்.




Tags : Panruti , Cashew blossoms scorched by heavy snow in Panruti region: Farmers suffer: Advice requested
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு