இந்து அறநிலையத்துறை விசேஷ அனுமதியுடன் பழநி மலையில் இன்றிரவு தங்கும் 1 லட்சம் இடைப்பாடி பக்தர்கள்

இடைப்பாடி:  இடைப்பாடி பகுதிகளில் இருந்து பழநிக்கு பாத யாத்திரை செல்லும் மீனவ சமுதாய மக்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இன்றிரவு பழநி மலையில் தங்கி, நாளை விசேஷ வழிபாடு நடத்துகின்றனர். முருகனின்  அறுபடை வீடுகளில் ஒன்றான திருவாவினன்குடி என்றழைக்கப்படும் பழநி மலையில்,  தைப்பூசத் திருவிழாவின் போது, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில்  இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு, சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பழநி மலைக்கு பாத யாத்திரையாக செல்வதை 350 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமாக கொண்டுள்ளனர்.

இடைப்பாடி தாலுகாவில் சுமார் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர்  வசிக்கின்றனர். இதில் சுமார் 1.25 லட்சம் பேர் மீனவர் சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள். இவர்கள் ஆண்டுதோறும் தைப்பூசம் முடிந்ததும், பாதயாத்திரையாக பழநிக்கு சென்று ஒருநாள் அங்கு தங்கி வழிபாடு நடத்துகிறார்கள். இவர்கள் பழநி மலையில் தங்க, இந்து அறநிலையத்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. நடப்பாண்டு இடைப்பாடி, அம்மாபேட்டை, சீரகாபாடி, காவேட்டிப்பட்டி, பழையபேட்டை, புதுப்பேட்டை, சின்னமணலி, நடுத்தெரு, ஏரி ரோடு, கா.புதூர் பகுதிகளில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், பழநி மலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் பழைய இடைப்பாடி, வெள்ளூற்று பெருமாள்  கோயில், செங்கமாமுனியப்பன் கோயில், பள்ளிபாளையம், ஈரோடு,  மயிலாடி, காங்கேயம் வட்டமலை வழியாக பாத யாத்திரையாக சென்று, நேற்றிரவு தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் தங்கினர். அவர்களுடன் கும்பகோணத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த மீனவ சமுதாய மக்களும் ஒன்றிணைந்தனர். பின்னர், அனைவரும் இன்று (12ம் தேதி) காலை பழநி மலைக்கு செல்கின்றனர். அங்கு சுவாமியை தரிசிக்கும் அவர்கள், இன்றிரவு இந்து அறநிலையத்துறையின் சிறப்பு அனுமதியுடன் மலையில் தங்குகின்றனர்.

இன்று இரவு மட்டும் பழநி மலைக் கோயிலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தங்குகின்றனர். பின்னர், நாளை காலை சுவாமியை தரிசித்து விட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். பிரசித்தி பெற்ற பழநி மலை முருகன் கோயிலில், இரவு 10 மணிக்கு மேல் கோயில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதற்கு மேல் பக்தர்கள் யாருக்கும் மலை மீது தங்கியிருக்க அனுமதி கிடையாது. ஆனால், பருவதராஜ குல மக்களுக்கு மட்டும், செப்பு பட்டயத்தில் சாசனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அவர்களுக்கு ஒரு நாள் இரவு பழநி மலையில் தங்கி சுவாமியை தரிசிக்க இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழநி மலையில் இரவு தங்கும் பருவதராஜ குல மக்கள், தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரித்துக் கொள்வதற்கு ஏதுவாக, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 15 டன் அளவுக்கு பஞ்சாமிர்தம் தயாரிப்பதாக கூறுகிறார்கள். இதற்காக டன் கணக்கில் வாழைப்பழம், கற்கண்டு, வெல்லம், பேரீட்சை, பச்சை கற்பூரம் போன்றவற்றை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு படைத்த பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

Related Stories: