×

மாசி மாத பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்:  மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. வருகிற 17ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்த காலத்தில் கோயில் மொத்த வருமானம் ரூ.360 கோடியை தாண்யது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று பிற்பகலுக்குப் பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இம்முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Masi month puja Sabarimala walk opening today
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...