×

மீனவர் பிரச்னை குறித்து ஆலோசனை இலங்கை அதிபருடன் எல்.முருகன் சந்திப்பு

கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது மீனவர் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா, இலங்கை நாடுகளுக்கிடையேயான  நல்லுறவை வௌிப்படுத்தும் விதமாக இலங்கை மக்களுக்காக இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை  3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து யாழ்ப்பாண  பல்கலைக் கழக மாணவர்களுக்கு சிறப்பு உதவி திட்டங்களையும் எல்.முருகன் அறிவித்தார். அதன்பின் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதித்தார். அப்போது மீன்பிடித்தொழில்தான் அவர்களின் வாழ்வாதாரம் என்பதை அதிபர் ரணிலுக்கு அவர் எடுத்துரைத்தார். மேலும் இருநாடுகள் இடையே மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகத்தை அதிபர் ரணிலுக்கு அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

* தமிழர்கள் ஒத்துழைப்பு தேவை
யாழ்ப்பாணத்தில் அரசு அதிகாரிகளிடையே பேசிய ரணில் விக்ரமசிங்கே, “திரிகோணமலை துறைமுகத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்யும் என நம்புகிறேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில்  மீட்கும் நடவடிக்கைகளுடன், வடக்கு பிராந்திய வளர்ச்சிக்கான திட்டங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டும். போர் முடிவுற்று 14 ஆண்டுகள் கடந்த பிறகும், வடக்கு பிராந்தியங்கள் வளர்ச்சி அடையவில்லை. எனவே, வடக்கு பிராந்தியங்களின் வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

* 100 தமிழ் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இன்று மிக முக்கியமான நாள். கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா நிதியுதவி உத்தரவாதம் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் உள்ள தமிழ் குழந்தைகள் 100 பேருக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

Tags : L. Murugan ,President of Sri Lanka , L. Murugan meeting with the President of Sri Lanka to discuss the issue of fishermen
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...