சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேநேரத்தில், முன்னாள் அமைச்சர்கள் செலவுக்காக பணத்தை எடுக்காமல் கை வீசிக்கொண்டு பிரசாரம் செய்து வருவதால், தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், அதிமுக ஆரம்பம் முதல் திணறி வருகிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல, ஆரம்பம் முதல் ஒவ்வொரு பிரச்னையை கடந்து வருவதற்குள், வேட்பு மனு தாக்கல் முடிந்துவிடும் அளவுக்கு, கடைசி நாளில்தான் மனுதாக்கலே செய்ய முடிந்தது.
அதன்பின்னர்தான், வேட்பாளர் அறிமுகக் கூட்டமே நடந்தது. அறிமுகக் கூட்டம் கூட, ஈரோடு மேற்கு தொகுதியில்தான் அதிமுக நடத்தியது. போஸ்டர் அடிப்பது முதல், பேனர் வைப்பது, பிரசாரம் செய்வது வரை எல்லாவற்றிலுமே பாஜ புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் அவர்களும் பிரசாரத்துக்கு வரவில்லை. அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பிரசார களத்தில் அதிமுக களம் இறக்கியது. அவர்களில் பலரும் தங்களது நண்பர்கள், கட்சியினரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதோடு சரி. பெரிய அளவில் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் யாரும் இதுவரை தேர்தல் செலவுக்காக பெரிய அளவில் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. வேட்பாளர் மட்டும் தன்னிடம் இருந்த 3 ஸ்வீட் பாக்ஸ்களை கட்சி தலைமையிடம் கொடுத்துள்ளார். அதை வைத்துத்தான் தற்போது பிரசார செலவுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தை நிர்வாகிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் செலவுக்கு பணம் தருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், வாக்களர்களை கணக்கெடுக்கும் பணியில் நோட்டுடன் அவர்கள் தொகுதியை சுற்றி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2 லட்சம் பேருக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் ரூ.40 கோடியை செலவு செய்ய ஈரோட்டில் தனது உறவினர்கள் மூலம் பணத்தை சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே பணத்தை தொகுதிக்குள் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான், பணத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தலைமையில் இருந்து கொடுக்கப்பட்ட பணம் முழுமையாக கட்சி நிர்வாகிகளிடம் சென்றடையவில்லை. இடையில் உள்ள நிர்வாகிகள் அமுக்கிக் கொண்டனர். இந்த இடைத்தேர்தலில் வெளி மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு பணத்தை விநியோகம் செய்ய தலைமை கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்காகத்தான் அவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் பணம் முழுமையாக வாக்காளர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரம் கையில் இல்லாததால் நிர்வாகிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று முன்னாள் அமைச்சர்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர். அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.