விஸ்வரூபம் எடுக்கும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் : 500 புதிய ஜெட் விமானங்களை வாங்குகிறது!!

டெல்லி : ஏர் இந்தியா நிறுவனத்தை தன்வசம் ஆக்கியுள்ள டாடா குழுமம், அதிரடி நடவடிக்கையாக ஏர் பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஏர் இந்தியா, டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஜனவரி 27ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. தனியார் மயமாக்கப்பட்ட பிறகு ஒரே ஆண்டில் ஏர் இந்தியாவின் சராசரி வருமானம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கையும் 27% உயர்த்தப்பட்டு தற்போது 100 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஏர் இந்தியாவை உலகின் பெரும் விமான நிறுவனங்களில் ஒன்றாக கட்டமைக்கும் திட்டத்தின் முக்கிய கட்டத்தை  டாடா குழுமம் எட்டியுள்ளது.

ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் இருந்து 500 ஜெட்  விமானங்களை வாங்க டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக இந்திய மதிப்பீட்டில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய டாடா திட்டம் வகுத்துள்ளது. பிரான்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 250 A320 neos, A350s விமானங்களை வாங்க டாடா குழுமம் வெள்ளியன்று ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக ஏர் இந்தியாவை டாடா குழுமம் வசப்படுத்திய முதல் ஆண்டு நிறைவு நாளான ஜனவரி 27ம் தேதி போயிங் நிறுவனத்துடன் மற்றொரு விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் டாடா ஒப்பமிட்டுள்ளது. அதன்படி 190 போயிங் 737 மேக்ஸ் வகை விமானங்களை டாடா வாங்குகிறது. மேலும் போயிங் 787 மற்றும் போயிங் 777 Xs விமானங்கள் என மொத்தம் 220 விமானங்களும் போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கி உள்ளது. அயல்நாட்டு விமான சேவைகள் மற்றும் உள்நாட்டு நகரங்களுக்கு இடையேயான பயணங்களில் இழந்த தனது பங்கினை மீண்டும் கைப்பற்றும் முயற்சியை ஏர் இந்தியாவின் இந்த ஒப்பந்தங்கள் பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories: