புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மகுண்டா னிவாசலுரெட்டியின் மகன் மகுண்ட ராகவாவை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘டெல்லியில் மதுபான வியாபாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எம்பி மகுண்டா னிவாசலு ரெட்டியை சந்தித்துள்ளார்.
தெலங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதாவின் முன்னாள் ஆடிட்டரை, கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபான வழக்கில் சிபிஐ கைது செய்தது. அதன் தொடர்ச்சியாகவே எம்பியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அமலாக்கத்துறை இதுவரை, இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளது. மொத்தம் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட டெல்லி அரசின் பிற கலால் துறை அதிகாரிகள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது’ என்றன.
