ராஜபாளையம் பகுதியில் பனி மூட்டம், சாரல் மழையால் அறுவடைப் பணிகள் பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பனி மூட்டம் மற்றும் அடிக்கடி சாரல் மழை பெய்வதால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் நெல், கரும்பு மற்றும் பயிர் வகைகள், சிறுதானிய வகைகளை பயிரிட்டனர். இவைகள் நன்றாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், தற்போது இரவு முதல் அதிகாலை வரை பனி மூட்டம் நிலவி அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இவ்வாறு சீதோஷ்ண நிலை மாறி வருவதால், நெல் மற்றும் சிறுதானிய வகைகளை சிரமப்பட்டு அறுவடை செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ராஜபாளையம் பகுதியில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மற்ற சிறுதானியப் பொருட்களுக்கு தனியார் கொள்முதலை நம்பியுள்ளோம். இப்பகுதியில் கரும்பை கொள்முதல் செய்ய, அரசு சர்க்கரை ஆலை மற்றும் சிறுதானியம் உள்ளிட்ட பயிர் வகைகளை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் அமைக்கவும், உலர்களம் அமைக்கவும் நடவடிக்கை வேண்டும்.

மேலும், விளைபொருட்களுக்கு தனியாரிடம் போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் விளைபொருட்கள் அனைத்தையும் அரசே கொள் முதல் செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: