×

போடி அருகே சேம்பூத்து ஆற்றுப்பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகள் ‘படு ஸ்பீடு’ - விவசாயிகள் மகிழ்ச்சி

போடி: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள போடி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் வேளாண்துறை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய தடுப்பணை, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

போடி அருகே மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதி குரங்கணி கொட்டகுடி, அடகுப்பாறை, கொம்பு தூக்கி அய்யனார் கோயில், காரிப்பட்டி உட்பட பல்வேறு மலைக் கிராமங்களை கொண்ட விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. போடி குரங்கணியிலிருந்து சாம்பலாற்று தடுப்பணை தாண்டிய கொட்டகுடி ஆறு, பிச்சாங்கரை பகுதி வழியாக கடந்து போடி நோக்கி செல்கிறது. இப்பகுதிக்குள் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கரளவில் விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் சேம்பூத்து ஆற்று தண்ணீர் முந்தல் பகுதி வழியாக சென்று கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது.

இப்பகுதியில் பிச்சாங்கரை சாலையில் முட்டைக்கோஸ் என்ற இடத்தில் பெரிய தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த தடுப்பணையால் விவசாயம் செழிப்பதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் அருந்தவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : Semboothu river ,Bodi , Construction of barrage in Semboothu river near Bodi at 'fast speed' - farmers happy
× RELATED போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி...