×

பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம்: தமிழக அரசிடம் மக்கள் கோரிக்கை

கூடலூர்: பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் வரும் திறந்தவெளி வாய்க்காலில் கழிவுநீர் கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டி சுத்திகரிக்க ஆய்வோடு நின்றுபோன திட்டத்தை முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியாறு அணை நீரானது தென் தமிழகத்தின் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பெரியாறு அணையிலிருந்து திறந்த வாய்க்கால் மற்றும் சுரங்க வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர், போர்பை டேமிலிருந்து, பென்ஸ்டாக் பைப் முலமாகவும், இறைச்சல்பாலம் வழியாகவும் வெளியேற்றப்பட்டு, பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்திக்குப்பின் ஆற்றில் ஒன்று சேர்கிறது.

இதில் அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர் தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ளது. தேக்கடி ஏரியில் இருந்து இந்த ஷட்டர் பகுதி வரை ஒன்றரை கி.மீ., தூரத்தில் திறவை வாய்க்கால் உள்ளது. இந்நிலையில் குமுளி பஞ்சாயத்தில் உள்ள குமுளி, தேக்கடி, அட்டப்பள்ளம், 1ஆம் மைல் பகுதிகளில் உள்ள 100&க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், ஓட்டல்கள், ரிசார்டுகள் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் பொதுக்கழிப்பறைகள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆனைவச்சால் பகுதியில் உள்ள இந்த திறந்தவெளி கால்வாயில் கலக்கிறது. இதனால் தமிழகப்பகுதிக்கு ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படும்போது கழிவுநீரும் கலந்து வருகிறது.

இந்த தண்ணீர் விவசாயத்திற்காகவும், குடிநீருக்காவும் சப்ளை செய்யப்படுகிறது. அதில் கழிவுநீரும் கலந்து வருவதால் அதை குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் இந்த கழிவுநீரை தடுப்பணை கட்டி சுத்திகரிக்க தமிழக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் கழிவுநீரை தடுப்பணை கட்டி சுத்திகரிக்க முடிவுசெய்தனர். இதுகுறித்து கடந்த 2020ல், அப்போதைய தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏவாக இருந்த ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆனவச்சால் பகுதியில் கழிவுநீர் கலக்கும் இடத்தை ஆய்வு செய்து, கழிவுநீரை தடுப்பணை கட்டி சுத்திகரிக்க திட்டமிட்டனர்.

ஆனால் அதற்குப்பின், தடுப்பணை கட்டி கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டம் என்ன ஆனதென்று தெரியவில்லை. எனவே ஆய்வோடு நின்றுபோன இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன் காட்சிக்கண்ணன் கூறுகையில், ‘‘சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி-குமுளியில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ரிசார்டுகள், கடைகள் மற்றும் இங்குள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பொதுக்கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஆனைவச்சால் பகுதியில் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் திறந்தவெளி கால்வாயில் கலக்கிறது.

இதை அங்கேயே தடுப்பணை கட்டி சுத்திகரித்து அனுப்பவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதையடுத்து 2020ல் தமிழக அரசு சார்பாக ஆய்வு செய்ததோடு சரி, பின் எந்த வேலையும் நடைபெறவில்லை. எனவே முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோல் பெரியாறு அணை தண்ணீரை லோயர்கேம்ப்பில் இருந்து 1296 கோடி மதிப்பில் அம்ருட் திட்டத்தின் கீழ் குழாய் வழியாக மதுரை மாநகருக்கு கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கூடலூர் குருவனூத்து பாலம் பகுதியில் ஆற்றில் தடுப்பணை கட்டி வருகின்றனர்.

இங்கிருந்து ஆற்றில்வரும் தண்ணீரை தடுப்பணையிலிருந்து குழாய் முலம் கொண்டு செல்லப்பட உள்ளது. ஆனவச்சால் பகுதியில் தடுப்பணை கட்டி கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டால் இங்கிருந்தே சுத்தமான தண்ணீர் மதுரைக்கு கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது.’’ என்றார். இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆனவச்சாலில் கழிவுநீர் கலக்கும் இடம் தமிழகத்தின் குத்தகை நிலத்தில் வருகிறது. அங்கு குமுளி பஞ்சாயத்து சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த 2020ல் இடம் கேட்கப்பட்டது. அப்போது நடந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை’’ என்றனர்.

Tags : Government of Tamil Nadu ,Periyaru dam ,Tamil Nadu , Treatment plant to prevent mixing of sewage with water coming to Tamil Nadu from Periyar dam: People's request to Tamil Nadu government
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...