* கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைகிறது
* தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேலூர்: நீரின்றி அமையாது உலகு என்ற முதுமொழிக்கு ஏற்ப மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்குவது தண்ணீரே. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒரு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகக்கூடும். தாவரங்கள் உள்பட அனைத்து உயிரினங்களின் உடல் எடையில் முக்கால் பங்கிற்கு மேல் இருப்பது தண்ணீரே. இப்பூமி பந்தில் தண்ணீர் இல்லாத இடமே இல்லை. நம்மைச் சுற்றி உள்ள காற்றிலும், நம்மைச் சுமந்து நிற்கும் மண்ணிலும் தண்ணீர் உள்ளது.
இந்த பூமி, ‘நீர்க்கோளம்’ என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு இப்புவியின் ஒட்டு மொத்த பரப்பளவில் 70 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பி இருப்பதுதான் காரணமாகும். அந்த நீரில் 70.7 சதவீதம் உப்பு நீரான கடல் நீராகும். மீதம் இருக்கிற 29.3 சதவீதம் நன்னீரையே நாம் நிலப்பரப்பில் பெற்றாக வேண்டும். சூரிய வெப்பத்தால் கடல் நீர், ஆவியாக மாறி, காற்றில் கலந்து மேல் சென்று மேகங்களாக திரண்டு தூய்மையான மழைநீராக பொழிகிறது. அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவியாகி மழையையும், தண்ணீரையும் சுழற்சி முறையில் பெறுகிறோம்.
மேகத்துளிகளில், ஒரு துளி நீரிலும் உப்பில்லை என்பது இயற்கையின் பேரதிசயமே. உணவை உற்பத்தி செய்வதற்கு தண்ணீர் உதவுகிறது. அதே நேரத்தில் அந்த தண்ணீர் உணவாகவும் இருக்கிறது. தண்ணீருக்கென்று தனியாக நிறம் கிடையாது. சுவை கிடையாது. மணம் கிடையாது. அது சேரும் பொருளுக்கேற்ப நிறத்தையும், சுவையையும், மணத்தையும் கொடுக்கும். நீரும் நீரும் கலந்தால் நீராகுமே அன்றி தனித்தனியே நிற்காது.உடலுக்குத் தேவையான சத்துக்களில் தண்ணீரும் ஒன்று. தண்ணீர் மட்டும்தான் திட, திரவ, வாயு நிலையில் இருக்கக் கூடியது.
அதாவது பனிக்கட்டியாக, தண்ணீராக, ஆவியாக மூன்று நிலைகளை எடுக்கக் கூடியது. தண்ணீர் என்பது இயற்கையின் அரிய பொக்கிஷம். இப்படி மனிதர்கள் மட்டுமின்றி உயிர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தண்ணீர் கடலில் உவர்நீராகவும், பூமியில் நன்னீராகவும் நிலத்தடியிலும், அதன் மேற்பரப்பில் நதிகளாகவும், ஏரிகளாகவும் நிறைந்து உயர்களின் இயக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. இப்படி மனித நாகரீகமே நதிப்படுகைகளில்தான் உருவானது என்பது வரலாறு நமக்கு கூறும்சேதி. நதிப்படுகைகள்தான் விவசாய கண்டுபிடிப்புக்கும் மனிதனின் சமூகமாக கூடி வாழ்வதற்கும் பாடத்தை கற்பித்தன.
அப்படி உலகம் முழுவதும் நதிகள் பல ஓடி பல நாடுகளை வளப்படுத்தி வரும் வேளையில் வடதமிழகத்தின் நீராதாரமாக விளங்கி வருவது பாலாறு. பாலாறு கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திர மாநிலத்தின் 33 கி.மீ தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ தூரமும் பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூரில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது. பருவமழையை மட்டுமே ஆதாரமாக கொண்ட பாலாறு ஒரு காலத்தில் பொங்கி பிரவகித்த நிலையில், அண்டை மாநிலங்களின் அடாத செயலால் தமிழக பரப்பில் வறண்டு காட்சி அளித்தது.
ஆனாலும் தனது அடிமடியில் நீராதாரத்தை வைத்திருந்த பாலாற்றை மணல் கொள்ளையர்களும், தொழிற்சாலை கழிவுகளும் காவு வாங்கி பாலாற்றை கழிவுநீரும், குப்பைகள் தேங்கும் ஆறாகவும் மாற்றி அதன் நிலத்தடி நீரையும் அசுத்தமாக்கி வைத்திருந்தனர். இந்த நிலை கடந்த ஓராண்டாக பாலாறு வற்றாத ஜீவநதியாக மாறி மனதை குளிர்வித்து வருகிறது. வேலூர் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என்ற மூன்றிலும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
இதனால் இம்மாவட்டத்துக்கு மக்கள் அதிகளவில் குடிபெயர்ந்து வரும் நிலையில், குறிப்பாக வேலூர் மாநகராட்சி பகுதியில் தரமான குடிநீரை வழங்குவது அவசியமாகிறது. வேலூரை சுற்றி பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய அளவில் இருக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் கழிவுகள் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு நிலத்தடி நீரின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, வேலூர் மாநகரின் நிலத்தடி நீரின் தரம் ஆய்வு செய்வது அவசியமாகிறது. பாலாற்றில் இருந்து 2-3 கிமீ தொலைவில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில் மாதிரி நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பல்வேறு மாதிரி நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் பிஎச், வெப்பநிலை, மொத்தம் கரைந்த திடப்பொருட்கள், மின் கடத்துத்திறன், குளோரைடு, கடினத்தன்மை மற்றும் உப்புத்தன்மை போன்ற இயற்பியல்-வேதியியல் அளவுருக்கள் ஆய்வு செய்யப்பட்டன. நிலத்தடி நீரின் தரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட இயற்பியல்- வேதியியல் அளவுருக்கள் குடிநீருக்கான பிஐஎஸ் மற்றும் ஐசிஎம்ஆர் தரங்களுடன் ஒப்பிடப்பட்டன.
கடந்த ஓராண்டை கடந்து நீர்வரத்தை கொண்டுள்ள பாலாற்றில் சமீபத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர் சேண்பாக்கம் மற்றும் கீழ்மின்னலுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு இயற்பியல் ரசாயன அளவுருக்கள், நிலத்தடி நீரின் தரம் மோசமடைந்து வருவது தெரிய வந்துள்ளது. எஸ்13 மற்றும் எஸ்14 மாதிரி நிலையத்தின் நிலத்தடி நீருக்கு சிறப்பு கவனம் தேவை, ஏனெனில் டிடிஎஸ், மின் கடத்துத்திறன், குளோரைடு, கடினத்தன்மை மற்றும் உப்புத்தன்மை போன்ற அனைத்து அளவுகளும் மிக அதிகமாக காணப்படுகின்றன. பாலாற்றை சுற்றியுள்ள கிராமங்கள் நிலத்தடி நீர் கார, அமிலம் மற்றும் உவர்ப்பு தன்மை மிகுந்ததாக உள்ளது.
தொடர்ந்து நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகரித்து வருவதால் நிலத்தடி நீரினை சேமித்து வைக்கும் போது உப்பு படிமங்கள் படிந்து மண்ணின் மேல்தோற்றம் வெள்ளை நிறத்தில் மாறுகிறது. இது அசுத்தமான நீரை உட்கொள்ளும் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் இது பாசன நோக்கத்திற்கும் மிகவும் பொருத்தமானது அல்ல. மற்ற அனைத்து மாதிரி நிலையங்களும் அந்தந்த இயற்பியல்- வேதியியல் அளவுருக்கள் பிஐஎஸ் மற்றும் ஐசிஎம்ஆர் வரம்புகளுக்கு சற்று மேலே உள்ளன. எனவே, முறையான நீர் சுத்திகரிப்பு தேவை.
குறுகிய கால நன்மைக்குப் பதிலாக சிறந்த சமூக ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய பொதுவான சொத்து வளமாக நதிக்கரை படுக்கையின் அவசியத்தை ஆய்வின் முடிவு வலியுறுத்துகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பாலாறு பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்தது. இதனால் தோல் கழிவுநீர், ரசாயன கழவுநீர், பிளாஸ்டிக் குப்பைகள் என ஓடி கொண்டு இருந்தது. இதனால் பூமி அடியில் பல நூறு அடி வரை நிலத்தடி நீர் மாசடைந்தது. இதனால் எந்தமாதிரியான நீலத்தடி நீர் உள்ளது என்று தெரியாது. பாலாற்றில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக நீர்வரத்து இருந்து வருகிறது.
இருப்பினும் இந்த தண்ணீர் செல்வதால் உடனடியாக நிலத்தடி நீர் மட்டம் மாறிவிடாது. சிறிது, சிறிதாகத்தான் மாறும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான பூமி அமைப்பு உள்ளது. உப்பு தண்ணீர் என்பது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலுமே இருந்து வருகிறது. நிலத்தடி நீர் மாசடைவது ஒருபக்கம் என்றால் சில இடங்களில் இயற்கையாகவே உப்பு தன்மை கொண்ட நீரும் இருக்கிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் உப்பு தண்ணீரை கூட பரிசோதனை செய்து உபயோகித்தால் நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயம் செய்யலாம்
பயிருக்கு தேவையான நீரை பாய்ச்சும் போது, நீரில் கலந்துள்ள உப்பானது, வேரின் அடிமட்டத்துக்கு கீழ் சென்றுவிடுகிறது. உவர் தன்மை இல்லாத நீரில், நீர் வெளியேறும் வடிகால் வசதியுள்ள நிலங்களில் பயிர்கள் வளரும். மிதமான உவர் நீரில் காய்கறிகள், உருளைக்கிழங்கு, மணிலா, வேலிமசால், வாழை மற்றும் பூ வகைகள் சாகுபடி செய்யலாம்.
உப்பை எவ்வாறு வெளியேற்றுவது?
உப்பு படிந்த நிலங்களில் 2 அடி வரை ஆழத்தில் உப்பு தங்கி இருக்கும். உப்பு படிவங்களை உடைக்க உளி கலப்பையைக் கொண்டு ஆழமாக உழுது, நிலம் காற்றோட்டம் புகும் வகையிலும், நுண்ணுயிர்கள் உள்ளே செல்வதற்கு ஏதுவாகவும் நிலத்தை மாற்றலாம். மேலும், இந்த நிலங்களில் விதைப்பதற்கு 6 வாரங்களுக்கு முன், ஒரு ஹெக்டேருக்கு 1.2 முதல் 2 டன் அளவில் ஜிப்சத்தை தினமும் கொட்டி நிலத்தை முறையாக உழுது பயன்படுத்தலாம். மழைநீர் உப்பு கலப்படம் இல்லாத நல்ல நீர்.
அதனால், உப்பு பாதித்த நிலங்களில் பாத்திகள் அமைத்து, விழும் மழை நீரை அந்த நிலத்திலேயே சேமித்து மழைநீர் நிலத்தில் உட்புகும் வகையில் அமைக்கலாம். மழைநீர் உட்புகாமல் தேங்கி இருந்தால், அந்த நிலங்களின் சாய்வின் மூலையில் உள்ள வரப்பை உடைப்பதால் தேங்கியுள்ள மழைநீர் விரைவாக வெளியேறி, மேல்புறம் உள்ள உப்பை கரைத்து அதன் தாழ்வான பகுதியில் அமைந்திருக்கும் ஓடைகளின் வழியே வெளியேறி, நிலங்களில் உப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவும். இம்முறை நீரினால் அலசுதல் என்றழைக்கப்படுகிறது.
