×

கொள்ளிடம் அருகே நிலத்தடிநீர் உப்பாக மாறியதால் குடி தண்ணீருக்காக 2 கி.மீ தூரம் அலையும் கிராம மக்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே நிலத்தடிநீர் உப்பாக மாறியதால், குடி தண்ணீருக்காக 2 கி.மீ.தூரம் கிராம மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் கிடைக்காமல் கால்நடைகளும் தவித்து வருகின்றது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி காடுவெட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாதது நிலை உள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அப்பகுதிக்கு பூமிக்கடியிலிருந்து குடிநீர் குழாய் மூலம் வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதால். அன்றாடம் சாதாரணமாக தேவைப்படும் போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் பைக் போன்ற இருசக்கர வாகனங்கள் மூலமும் தலையில் தண்ணீர் குடங்களை சுமந்தும் அடுத்துள்ள கிராமத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று தண்ணீரை எடுத்து வருகின்றனர்.

மழை காலத்தில் மக்கள் தண்ணீர் எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்காத சூழ்நிலையில், ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வருவதற்காக பக்கத்து கிராமத்திற்கு சென்று தண்ணீரை எடுத்து சுமந்து வந்த பிறகே பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் மாணவர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு கால தாமதத்துடன் தான் செல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருந்து வருகின்றனர்.

மேலும் இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டியே அமைந்திருந்தாலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் தொடர்ந்து புகுந்து வந்ததால் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காடுவெட்டி கிராமத்துக்கு தினந்தோறும் வரவேண்டிய குடிநீர் வராமல் உள்ளதால் இக்கிராம மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

தினந்தோறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் மூலம் காடுவெட்டி கிராமத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ள குடிநீரை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் போதிய குடிநீர் கிடைக்காததால் இக்கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆடு, மாடுகளும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது. கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீரை எடுப்பதற்கு பக்கத்து கிராமத்திற்கு சிரமத்துடன் சென்று இதற்காகவே காலம் தாழ்த்த வேண்டிய சூழ்நிலையில் கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் காடுவெட்டி கிராமம் இருந்தும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள். எனவே போர்க்கால அடிப்படையில் காடுவெட்டி கிராமத்தில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டியே இக்கிராமம் அமைந்திருந்தாலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் தொடர்ந்து புகுந்து வந்ததால் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர உப்பு நீராக மாறிவிட்டது.

Tags : Kollidam , Villagers wander 2 km for drinking water as groundwater turns salty near Kollidam: Request authorities to take action
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி