×

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் 24,000 நெருங்கும் உயிரிழப்புகள்: மீட்பு பணிகள் 6வது நாளாக தீவிரம்..!

அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 22,000ஐ தாண்டி உள்ளது. துருக்கி, சிரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணி அளவில், 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் இரு நாடுகளையும் அதிகளவில் சிதைத்துள்ளது. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து மக்கள் கொத்து கொத்தமாக புதைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. மீட்புப்பணியில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி உள்ளன.

நிலநடுக்கம் நடந்து 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்றும் இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். துருக்கி, சிரியாவில் தற்போது கடும் உறைபனி நிலவுகிறது. அதிகாலை 4 மணிக்கு பாட்டிலில் உள்ள குடிநீர் உறைந்து பனிக்கட்டியாகிவிடும் அளவுக்கு குளிர் வாட்டுகிறது. பொதுவாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஒருவாரம் மற்றும் அதற்கு மேலாகவும் உயிர் வாழ முடியும். ஆனால் இப்படிப்பட்ட உறைபனி சூழலில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பது கடினமாவதோடு, அவர்களை கண்டறியும் பணியும் சிக்கலாவதாக மீட்புப்பணி நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், அதிசயமாக பலர் தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டபடி உள்ளனர். அதே சமயம் நிலநடுக்கத்தில் இருந்து தப்பி தற்காலிக முகாம்களில் உள்ள மக்கள் கடும் குளிர், பசியால் வேதனைப்பட்டு வருகின்றனர். துருக்கி அரசு தரப்பில் நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், இன்னும் பல நகரங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் உள்ளது. துருக்கியில் இதுவரை 20,213 பேர் பலியாகி உள்ளனர். 75,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில் 3,553பேர் இறந்துள்ளனர். 21,600 பேர் காயமடைந்துள்ளனர்.

1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிக்காக உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் மற்றும் போயிங் உள்ளிட்ட பெரு நிறுவனங்களும் நிதி உதவியை அறிவித்துள்ளன.

Tags : Turkey ,Syria , Death toll nears 24,000 in Turkey and Syria: Rescue operations intensify for 6th day..!
× RELATED துருக்கியில் கேபிள் கார் விபத்து 23 மணி...