×

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் திமுக கேள்வி

புதுடெல்லி: மாநிலங்களைவையில் திமுக எம்பி கிரிராஜன் எழுப்பிய கேள்வியில், இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ன, அதற்காக வழங்கப்பட்ட நிதியின் மொத்த தொகை எவ்வளவு, இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்களின் முழு விவரம் என்ன, மேலும் அவர்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட உதவி விவரங்கள் என்பது தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், ‘‘இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கைக்கான மானிய உதவியாக இந்திய அரசு மேற்கொண்ட திட்டங்களால் கணிசமாகப் பயனடைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, சுகாதாரம் மருத்துவம், கலை, விளையாட்டு, கலாச்சாரம் போன்ற துறைகளில் அவர்களுக்கு மானியத் திட்டங்கள் உள்ளன. இலங்கையில் நடைபெற்று வரும் 16 மானியத் திட்டங்களில், 5 இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கு நேரடிப் பயன் தரக்கூடியவை ஆகும். மேலும் இலங்கை அரசு அதை உறுதி செய்வதற்காக அனைத்து திட்டங்களும் ஒன்றிய அரசாங்கத்தால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. அடையாளம் காணப்பட்ட மக்களை அது கண்டிப்பாக சென்றடைகிறது என தெரிவித்தார்.

கதிர் ஆனந்த்: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசுகையில்,‘‘2023-24 பட்ஜெட், இந்திய ஏழை மற்றும் நடுத்தர வர்க்க வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் பல முக்கியப் பிரச்னைகளை கவனிக்காமல் வைத்திருக்கும் திட்டமிட்ட முயற்சியாகத் தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் எந்த வித நிதியும் ஒதுக்கவில்லை. நூறு நாள் வேலைத் திட்டம். கிராமப்புறங்களில் இருக்கும் கரண்டி பிடிக்கும் பெண்கள் கரன்சி நோட்டை பிடிக்க வைக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த நோக்கத்தையே ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது. ஒன்றிய அரசு நரேந்திர மோடியை நம்பர் ஒன் பிரதமர் என்று தற்புகழ்ச்சி செய்து வருகிறது.‌ கடந்த ஆண்டு நாட்டிலேயே மிகச்சிறந்த நெம்பர் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று இந்தியா டுடே அறிவித்ததை நாடே அறியும். இவ்வாறு பேசினார்.

விஜய்வசந்த் கோரிக்கை: கன்னியாகுமரி மக்களவை எம்பி விஜய் வசந்த் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெராவத்தை சந்தித்தார். அதில்,‘‘ நெய்யாறு ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஆகவே இது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதியாக கருதப்படுகிறது. ஒன்றிய நீர்வள ஆணையமும் இதை இரு மாநிலங்களுக்கிடையான நதி என்று அங்கீகரித்துள்ளது. ஆனால் கேரளா அரசு இதை தங்கள் மாநிலத்திற்கு மட்டுமே சொந்தமான நதி என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதனால் நெய்யார் இடது கரை சானல் வழியாக பாசனத்திற்கு நீர் திறந்து விட கேரள அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து கோரிக்கையை துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பரிசீலனை செய்வதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளதாக விஜய்வசந்த் எம்.பி கூறினார்.

Tags : Union Government ,DMK ,Rajya Sabha , What is the Union Government's action to rehabilitate Sri Lankan Tamils? DMK Question in Rajya Sabha
× RELATED திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக்...