தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அமைச்சருடன் எல்.முருகன் பேச்சுவார்த்தை

கொழும்பு: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அமைச்சர் எல் முருகன், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்னையானது, அவர்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட மனிதாபிமான விவகாரம் என்பதை வலியுறுத்தி உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம் சென்ற போது, தமிழக மீனவர் விவகாரம் குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்திய குழுவினர் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தில் உள்ள யாழ்பாணத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். யாழ்ப்பாணம் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவினர். மேலும், காங்கேசன் துறைமுகத்தில் இந்தியாவின் நிதி உதவியால் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து, புதுச்சேரி மற்றும் காங்கேசன் துறைமுகம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்தனர். மேலும், புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரம் கோயிலில் அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார்.

Related Stories: