ரோகித் 120, ஜடேஜா 66*, அக்சர் 52*: இந்தியா வலுவான முன்னிலை; ஆஸி. அறிமுக சுழல் மர்பி அசத்தல்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில், கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஜடேஜா - அக்சர் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. ஜம்தா, விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னுக்கு சுருண்டது (63.5 ஓவர்). லாபுஷேன் 49, ஸ்மித் 37, ஹேண்ட்ஸ்கோம்ப் 31, அலெக்ஸ் கேரி 36 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 5, அஷ்வின் 3, ஷமி, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் (56 ரன்), அஷ்வின் (0) இருவரும் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஒரு முனையில் ரோகித் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... அஷ்வின் 23, புஜாரா 7, கோஹ்லி 12, சூரியகுமார் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆஸி. அறிமுக சுழல் டாட் மர்பி அபாரமாகப் பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தியதால், இந்தியா 200 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்றே தோன்றியது. அதற்கேற்ப, இந்தியா 59.1 ஓவரில் 168 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரோகித் - ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 61 ரன் சேர்த்தது.

டெஸ்ட் அணி கேப்டனாக தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்திய ரோகித் 120 ரன் (212 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த அறிமுக வீரர் ஸ்ரீகர் பரத் 8 ரன் எடுத்து மர்பி சுழலில் பெவிலியன் திரும்ப, இந்தியா 240 ரன்னுக்கு 7வது விக்கெட்டை இழந்தது.எனினும், 8வது விக்கெட்டுக்கு ஜடேஜா - அக்சர் ஜோடி மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆஸி. பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் குவித்தது. இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் (114 ஓவர்) குவித்துள்ளது. ஜடேஜா 66 ரன், அக்சர் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. பந்துவீச்சில் மர்பி 5, கம்மின்ஸ், லயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 3 விக்கெட் இருக்க, இந்தியா 144 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் ஆஸி. அணி கடும் நெருக்கடியுடன் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

* டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது. தனது 9வது டெஸ்ட் சதத்தை நேற்று ஆஸி.க்கு எதிராக விளாசிய போது இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்த பட்டியலில் திலகரத்னே தில்ஷன் (இலங்கை), பாப் டு பிளெஸ்ஸி (தென் ஆப்ரிக்கா), பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* அறிமுக ஆட்டத்திலேயே முதல் 4 விக்கெட்களை அள்ளிய ஆஸி. வீரர்களின் பட்டியலில் டாட் மர்பி (22 வயது) 3வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு ஜாக் சவுண்டர்ஸ் (1901-02) இங்கிலாந்துக்கு எதிராகவும், இயான் மெக்கிஃப் (1957-58) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராகவும் இப்படி எதிரணி விக்கெட்டை அள்ளி உள்ளனர்.

* அறிமுக டெஸ்டில் 5 விக்கெட் அள்ளிய 4 வது ஆஸி. வீரர் மர்பி. இதற்கு முன் பீட்டர் டெய்லர் (1986/87) சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக 6/78, ஜாசன் கிரெஜசா (2008/09) நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 8/215, நாதன் லயன் (2011) காலேவில் இலங்கைக்கு எதிராக 5/34 என அசத்தியுள்ளனர்.

Related Stories: