×

மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: வீரர்களுக்கு அனைத்து வசதியும் செய்துதர உத்தரவு

சென்னை: மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த பல்கலைக்கழகத்தில் இறகு பந்து, வாலிபால் மற்றும் மேசைப்பந்து, உள் விளையாட்டு பயிற்சி கூடங்கள், சிந்தடிக் ஓடுதளம், தடகளம், கால்பந்து,  ஹாக்கி மைதானங்கள், யோகா மையம், நூலகம், ஆராய்ச்சி கூடம், கருத்தரங்க கூடம், தியான மண்டபம் மற்றும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது, விடுதி மாணவர்களிடம் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, மாணவ, மாணவிகளுக்கு எவ்வித குறையுமின்றி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என கேட்டுக்
கொண்டார்.

விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் விளையாட்டு பயிற்சி கூடங்களை நல்ல முறையில் பராமரித்திடவும், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிடவும், ஒவ்வொரு மாணவர்களையும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குகின்ற வகையில் முறையான பயிற்சி அளித்திட வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் அனைவரும் விளையாட்டு பயிற்சியுடன் கல்வியிலும் முழு கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர், பதிவாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags : Minister ,Udhayanidhi Stalin ,Tamil Nadu Sports University ,Melakottaiyur , Minister Udayanidhi Stalin inspects Tamil Nadu Sports University, Melakottaiyur: Order to provide all facilities to players
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...