×

பெண் காவலருக்கு தொல்லை; இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்: டிஐஜி அதிரடி உத்தரவு

திண்டுக்கல்: பழநி அருகே பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இன்ஸ்பெக்டரை, டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வீரகாந்தி. இவர் கடந்த 2021, அக்டோபர்‌ மாதம் கீரனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வீரகாந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பியாக பணிபுரிந்த லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி, விசாரணையை துவக்கியது. புகார் கொடுத்த பெண் காவலர், சக போலீசார் மற்றும் குற்றச்சாட்டிற்கு உள்ளான வீரகாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அதில், பெண் காவலர் கொடுத்த ஆதாரம், இன்ஸ்பெக்டர் வீரகாந்தியின் செல்போன் உரையாடல், குறுந்தகவல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில் வீரகாந்தியின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான அறிக்கையை விசாகா கமிட்டி அரசுக்கு அனுப்பி வைத்தது.

தற்போது இச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு உறுதியானது என விசாகா கமிட்டியின் அறிக்கை தெரிவித்துள்ளதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை  பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை, டிஸ்மிஸ் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பெண் காவலர் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  பின்னர், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர், தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Harassment of female policeman; Inspector dismissed: DIG action order
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!