ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அசோக் கெலாட் தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்ததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த இந்த பட்ஜெட் தாக்களின் போது பட்ஜெட்டை வாசித்த முதலமைச்சர் அசோக் கெலாட் தற்செயலாக பழைய பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். அசோக் கெலாட் 15 நிமிடங்கள் பழைய பட்ஜெட்டையே வாசித்துக் கொண்டிருக்க உடனடியாக தலைமை கொறடா அதனை சுட்டிக் காட்டி நிறுத்தினார்.
இதனால் பாஜக எம்எல்ஏக்கள் அவையில் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபட தொடங்கினர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. முதலமைச்சர் வாசிக்கும் முன்பே புதிய பட்ஜெட் கசிய விடப்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். அதற்கு பதிலளித்த அசோக் கெலாட் தன் கையில் இருக்கும் பட்ஜெட்டுக்கும் அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நகல்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் மட்டுமே அதனை நீங்கள் சுட்டிக் காட்ட முடியும் என்றார்.
தன்னுடைய பட்ஜெட் நகலில் தவறுதலாக ஒரு பக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்த அசோக் கெலாட் இது தவறுதலாக நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.