×

அறுவை சிகிச்சைக்கு பின் தினமும் 12 மணி நேரம் பயிற்சி செய்தேன்: ரவீந்திர ஜடேஜா பேட்டி

நாக்பூர்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய பவுலர் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டி: நாக்பூர் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் சுழன்று திரும்பும் ஆடுகளமாக இருக்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது இது மெதுவாகவும், அதிக பவுன்ஸ் இன்றியும் காணப்பட்டது. இதனால் நேற்று பேட்ஸ்மேன்கள் பந்தை தடுத்து ஆடுவதில் சிரமமாக இல்லை.

ஆனால் போக போக தற்காப்பு பாணியில் ஆடுவது கடினமாக இருக்கும். நான் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பினேன். ஒவ்வொரு பந்தையும் சுழன்று திரும்பும் வகையில் வீசவில்லை. ஏற்கனவே சொன்னது மாதிரி ஆடுகளம் வேகமின்றி இருந்ததால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன் மனதில் சந்தேகம் உருவாகும் வகையில் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது. உதாரணமாக லபுஸ்சேன் கிரீசை விட்டு இறங்கி வந்து விளையாடிய போது களத்தில் பந்து பிட்ச் ஆனதும் சுழன்று திரும்பியதால் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார்.

அதே நேரத்தில் சுமித்துக்கும் பந்தை அதே இடத்தில் தான் பிட்ச் செய்தேன். ஆனால் பந்து சுழலாமல் அப்படியே நேராக சென்று ஸ்டம்பை தாக்கியது. நான் பந்து வீசிய விதத்தில் எனக்கு மகிழ்ச்சி. அதை சுகானுபவமாக அனுபவித்து விளையாடி இருந்தேன். ஐந்து மாதத்திற்கு பிறகு களம் திரும்பி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. அதற்கு நான் தயார் நிலையில் இருந்தேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் எனது திறன் சார்ந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தேன். அதில் 42 ஓவர்கள் வரை பந்து வீசி இருந்தேன்.

அது எனக்கு நிறையவே நம்பிக்கை கொடுத்தது. அது எந்த அளவுக்கு என்றால் சர்வதேச டெஸ்ட் போட்டியில் நேரடியாக களம் காணும் அளவுக்கு கிடைத்த நம்பிக்கை.  இதற்காக நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பந்து வீசி பயிற்சி செய்தேன். அது எனக்கு கை கொடுத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட ஸ்பெல் வீச வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். அதனால் அதை செய்தேன், என்றார்.

பந்தை சேதப்படுத்தினாரா?
நேற்றைய ஆட்டத்தின் போது ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில்,  ஜடேஜா முகமது சிராஜிடம் இருந்து எதையோ பெறுவதும், அதைத் தனது இடது ஆள்காட்டி விரலில் தடவி தேய்ப்பதும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ஆஸ்திரேலியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். இருப்பினும், பிசிசிஐ வட்டாரம் அது ”புண் விரலுக்கான வலி நிவாரணத்திற்கான மருந்து” என்றும், அதனை அவர் கைவிரலில் தேய்த்தார் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

கோஹ்லியிடம் கற்றுக்கொண்ட ஷாட்
நேற்று போட்டி முடிந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் கூறியதாவது: ” நான் இன்று(நேற்று) இங்கு விளையாடிய சில ஷாட்கள் நிச்சயமாக விராட் கோஹ்லியிடம் கற்றுக் கொண்டதுதான். தொடரை வெல்லத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். நாங்கள் மீண்டு வர முயற்சிப்போம். எங்களால் முடிந்தவரை கடுமையாக போராடி மீண்டும் உள்ளே வந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மூலமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

எவ்வளவு ஸ்கோர் சரியாக இருக்கும் என்று எப்போதும் கணிப்பது கடினமான ஒரு விஷயம். நான் எனது பார்ட்னர்ஷிப்பை 100, 150 ரன்களுக்கு நீட்டித்து இருந்தால் அடுத்து வரக்கூடிய எங்களது பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக விளையாடி இருப்பார்கள். 220, 240 ரன் எடுத்திருந்தால் அது ஒரு நல்ல முயற்சியாக இருந்திருக்கும்”, என்றார்.

Tags : Ravindra Jadeja , I practiced 12 hours a day after surgery: Ravindra Jadeja interview
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்...