×

ஆனைமலை அருகே ஆயக்கட்டு பாசன மெயின் கால்வாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்

*விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதூர் ஆயக்கட்டு பாசன மெயின் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால், பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதில், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளான பொள்ளாச்சி மற்றும் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை கால்வாய்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு வரும் 24ம் தேதியுடன் நிறைவடைவதாக கூறப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய்களுக்கு அண்மையில் 4வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், வேட்டைக்காரன்புதூர் மெயின் கால்வாயின் 7வது கிலோ மீட்டர் தூரத்தில், நேற்று அதிகாலையில் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சுமார் 10 அடி நீளத்திற்கு மேல் ஏற்பட்ட உடைப்பால், அப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதுடன், அதிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.

மேலும் உடைபட்ட கால்வாயிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி, அருகே உள்ள தோட்டங்களில் புகுந்தது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புதிய ஆயக்கட்டு பாசனமான வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த பொதுப்பணித்துறை அதிகரிகள், உடைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கால்வாய் உடைப்பு ஏற்பட்டதில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஆனால், தற்போது ஏற்பட உடைப்பால், விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேட்டைக்காரன்புதூர் மெயின் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சீரமைப்பதுடன், கூடுதல் நாள்  தண்ணீர் திறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை இன்னும் மூன்று நாட்களில், மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சீர்படுத்தி மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Tags : Ayakatdu ,Anaimalai , Anaimalai: Near Anaimalai, next to Pollachi, due to a breach in the Vedettakaranputur Ayakattu irrigation main canal, many
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...