*நாளையும் தேர்வுகள் நடக்கிறது
நெல்லை : நெல்லையில் நான்காவது நாளாக நடந்த காவலர் உடற்தகுதி தேர்வில் ஆண்களுக்கான 2ம் கட்ட போட்டிகளில் நேற்று 349 பேர் தேர்ச்சி பெற்றனர். நாளையும் தொடர்ந்து தேர்வுகள் நடக்கிறது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்தாண்டு நவ.27ம் தேதி தீயணைப்புத்துறை, சிறைத்துறை, காவல் துறை 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் நெல்லை மாநகரம், நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் ஆண்கள் பிரிவில் 1,159 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் தினமும் தலா 400 பேருக்கு பாளை. ஆயுதப்படை மைதானத்தில் உடல் திறன் மற்றும் உடற்தகுதி தேர்வுகள் கடந்த 6ம்தேதி முதல் நடந்து வருகிறது. வருகிற 11ம்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்வுகள் நடக்கிறது. நேற்று நான்காவது நாளாக நடந்த உடற்தகுதி தேர்வில் 350 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.
இதில் 349 பேர் நேற்று பங்கேற்றனர். இதில் ஒருவர் மட்டும் ஆப்சென்ட் ஆனார்.இவர்களுக்கு நேற்று (9ம் தேதி) முதல் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டியும், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளாகிய உடல் திறனை அளவிடும் 2ம் கட்ட தேர்வுகள் நடந்தது. இதில் 349 பேருமே தேர்ச்சி பெற்றனர். நாளையும் தொடர்ந்து தேர்வுகள் நடக்கிறது.இந்தத் தேர்வுகளை நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி சரவணன், ஏடிஎஸ்பி மாரிராஜ் ஆகியோர் காலை முதல் மாலை வரை பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர்.