×

களக்காடு சம்பவத்தில் வைடூரிய கல்லுடன் கைதான இருவருக்கு வெளிமாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

*வனத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்

களக்காடு : களக்காட்டில் வைடூரிய கல்லுடன் கைதான 2 பேருக்கும் வெளிமாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது வனத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் வெண்கல பாறை பீட் வனப்பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு மற்றும் 1995ம் ஆண்டு கால கட்டங்களில் வைடூரிய கற்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. கடத்தலில் ஈடுபட்ட கேரள கும்பல் கேரளாவில் இருந்து வனப்பகுதி வழியாகவே ஊடுருவி வைடூரியக் கற்களை வெட்டி கடத்திச் சென்றனர்.

கடத்தலில் ஈடுபட்ட சிலரை வனத்துறையினர் அடிக்கடி கைது செய்து வந்தனர். மேலும் கடத்தல் கும்பலுக்கும், வனத்துறையினருக்கும் இடையே இரண்டு முறை துப்பாக்கிசூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. களக்காடு மலையில் கிடைப்பது முதலில் வைரம் என கூறப்பட்டது. ஆனால் அது அரிய வகையை சேர்ந்த வைடூரிய கற்கள் என்று அப்போதைய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல அடி ஆழத்தில் புதைந்துள்ள வைடூரிய கற்களை தோண்டி எடுப்பது எளிதானது அல்ல. இதற்காக பல நாட்கள் கடத்தல் கும்பல் வனப்பகுதியில் தங்கியும் இருந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் இரவில் தான் வைடூரியத்தை எடுக்க குழி தோண்டுவார்கள் என்றும், அப்போது பாறைகளை தகர்க்க வெடி வைப்பார்கள் என்றும், அந்த வெடி சத்தம் இரவில் ஊருக்குள் எதிரொலிக்கும் என்றும், லைட் வெளிச்சம் கூட தெளிவாக தெரியும் என்றும் மலையடிவார கிராம மக்கள் இப்போதும் நினைவு கூர்கின்றனர். அப்போது கடத்தல் கும்பல் பற்றி வனத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின் களக்காடு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து வைடூரியக் கல் கடத்தலும் படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூ. கட்சி ஒன்றிய செயலாளர் முருகன், மற்றும் பொதுநல அமைப்பினர் நெல்லை கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.

அதில் களக்காடு வனப்பகுதியில் அந்நியர் நடமாட்டம் இருப்பதாகவும், வைடூரியக் கல் கடத்தப்படுகிறதா என விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து களக்காடு மலையில் வைடூரியக் கல் கடத்தல் மீண்டும் தலை தூக்குகிறதா என்ற கேள்விகுறி எழுந்தது.இந்நிலையில் களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மஞ்சுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர் போலீசார் அவர்களைப் பிடித்து சோதனையிட்டனர் இதில் அவர்கள் வைடூரியக் கல்லை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மஞ்சுவிளை நடுத்தெருவை சேர்ந்த முன்னாள் கிராம வனக்குழு தலைவரான சாமுவேல் மகன் சுசில்குமார் (57) கீழப்பத்தையை சேர்ந்த நடராஜன் மகன் வேல்முருகன் (42) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.

வைடூரியக் கல் கடத்தல் வனத்துறை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இருவரையும் கைது செய்த போலீசார்,  அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரை கிலோ எடையுள்ள வைடூரியக் கல்லை களக்காடு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வைடூரியக் கல்லின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி வரை இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

இதனிடையே பிடிபட்ட சுசில்குமார், வேல்முருகன் ஆகியோரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன், களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் செல்வசிவா மற்றும் வனத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். குறிப்பாக வைடூரியக் கற்கள் எப்படி வந்தது?, களக்காடு வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து துணை இயக்குநர் ரமேஷ்வரன் கூறுகையில் ‘‘2 பேரிடமும் உள்ள வைடூரியக்கல் களக்காடு மலையில் இருந்து  வெட்டி எடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’’ என்றார். ஆனால் சுசில்குமார், வேல்முருகனுக்கு மண்ணுளி பாம்பு கடத்தும் ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த வெளிமாநில கும்பலுடன் தொடர்பு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் பற்றி வனத்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

வழக்குப் பதிவிற்கு பின்னர் இருவரையும் வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட வைடூரிய கல்லை வனத்துறையினர் மீண்டும் களக்காடு போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் களக்காட்டில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப சொத்து

இதனிடையே சுசில்குமார் என்பவரிடம் நடத்திய விசாரணையில் ‘‘போலீசார் கைப்பற்றிய வைடூரியக் கல் தனது தந்தை சாமுவேலிடம் இருந்து வந்ததாகவும், அது தங்களது குடும்ப சொத்து என்றும், தந்தை சாமுவேல் கடந்த 2018ம் ஆண்டு இறந்ததாகவும், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் வைடூரியக் கல்லை தன்னிடம் கொடுத்ததாகவும் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையேதான் அவர் வனத்துறையிடமும் கூறியதாக வனத்துறையினரும் தெரிவித்தனர்.

Tags : Kalakadu incident , Kalakkad: Forest department investigation revealed that the 2 persons arrested with vitriol stone in Kalakkad have links with foreign smuggling gangs.
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...